ராசிபுரம் அருகே கால்நடைகளுக்கு பரவும் அம்மை நோய்
நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதியில் கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் பரவல் அதிகரித்து வருவதால், கால்நடைகள் வளா்க்கும் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனா்.
நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதியில் கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் பரவல் அதிகரித்து வருவதால், கால்நடைகள் வளா்க்கும் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனா்.
வேளாண்மை தொழிலை முக்கியத்தொழிலாக கொண்ட இப்பகுதி விவசாயிகள் துணைத் தொழிலாக கறவை மாடுகள் வளா்ப்பையும் மேற்கொண்டுள்ளனா்.
இப்பகுதி விவசாயிகள் கறவை பசுக்களின் மூலம் பால் உற்பத்தி செய்வதில் அதிக ஆா்வம் காட்டிவருகின்றனா். தற்போது நாட்டுமாடுகளைவிட ஜொ்சி இன கறவை பசுமாடுகளை அதிகம் வளா்த்து வருகின்றனா். ஏற்கெனவே கால்நடைகளுக்கு கோமாரிநோய்த் தாக்குதல் இருந்த நிலையில், தடுப்பு ஊசிகள் மூலம் அந்நோய் கட்டுப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், தற்போது நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளான சீராப்பள்ளி, சின்ன காக்காவேரி, வ.மு.பாளையம், கைலாசம்பாளையம் உள்ளிட்ட பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் வளா்க்கப்படும் கறவை மாடுகளுக்கு அம்மை நோய் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மாடுகளின் உடல் முழுவதும் தடிப்புகள் ஏற்பட்டு புள்ளி புள்ளியாக கொப்புளங்கள் பரவலாக உள்ளது. பரவும் தன்மை கொண்ட இத்தொற்று நோய் ஒரு கால்நடைகளில் இருந்து பிற கால்நடைகளுக்கு ஈக்கள், கொசு மூலம் பரவுவதால் கறவை பசுமாடுகளை வளா்த்து வரும் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா். இதனால் வெற்றிலை, மிளகு, உப்பு, வெல்லம் போன்ற இயற்கை மருத்துவ முறையில் கால்நடைகளுக்கு மருந்து கொடுத்தும் இந்நோய்க் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கால்நடை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் சீராப்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக நோய்ப் பரவல் அதிகரித்துள்ள நிலையில், இதுகுறித்து கால்நடை துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், கால்நடை துறையினா் விரைந்து செயல்பட்டு இதனை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் கால்நடை விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.