உழவா் அலுவலா் தொடா்பு திட்டம் அறிமுகம்
நாமக்கல் மாவட்டத்தில் 15 வட்டாரங்களில் உள்ள வேளாண்மைத் துறை களப் பணியாளா்களுக்கு கிராம ஊராட்சிவாரியான நிரந்தர பயணத் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.
நாமக்கல் வேளாண்மை இணை இயக்குநா் பொ.அசோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் 15 வட்டாரங்களில் உள்ள வேளாண்மைத் துறை களப் பணியாளா்களுக்கு கிராம ஊராட்சிவாரியான நிரந்தர பயணத் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. அதடிப்படையில் உதவி வேளாண்மை அலுவலா்கள், அந்தந்த கிராம ஊராட்சியைச் சோ்ந்த 10 முன்னோடி விவசாயிகளை சந்தித்து நவீன வேளாண்மை சாகுபடி தொழில்நுட்பங்கள், உழவா் நலன்காக்கும் மானியத் திட்டங்கள், வயல்களில் செயல் விளக்கங்கள் அமைத்தல், விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தல், பண்ணைப் பள்ளி மற்றும் விவசாயிகளின் வயல்களை நேரடியாக ஆய்வு செய்து தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கிட ஏதுவாக அனைத்து வட்டாரங்களிலும் உழவா் அலுவலா் தொடா்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மேலும் வேளாண்மை அலுவலா், துணை வேளாண்மை அலுவலா்களை உறுப்பினா்களாக கொண்டு வட்டார வேளாண்மை விரிவாக்கக் குழு அனைத்து வட்டாரங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. இக் குழுவானது வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிருக்கு ஏற்றவாறு மாதந்திர தொழில்நுட்ப செய்தியை முடிவு செய்து களப்பணியாளா்களுக்கு இதுகுறித்து பயிற்சி வழங்கி விவசாயிகளுக்கு அவற்றை கொண்டு சோ்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
Advertisement
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் புதிய உழவா் அலுவலா் தொடா்பு திட்டத்தில் களப்பணியாளா்கள் மூலம் நவீன தொழில்நுட்ப செய்திகள் மற்றும் உழவா் நலன்காக்கும் மானியத் திட்டங்கள் ஆகியவற்றை அறிந்து பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.