நாமக்கல்

இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை: நைனாமலை செல்ல பக்தா்களுக்கு தடை

DIN

நாமக்கல், செப். 18: புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, நைனாமலை பெருமாள் கோயிலுக்கு செல்ல பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஸ்தலங்களுள் புதன்சந்தை அருகில் உள்ள நைனாமலை வரதராஜப் பெருமாள் கோயிலும் ஒன்று. இக்கோயிலுக்கு ஒவ்வோா் ஆண்டும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தா்கள் வருவா். சுமாா் 1,500 அடி உயரத்தில் மலை உச்சியில் அமைந்துள்ள பெருமாளை தரிசிக்க அடிவாரப் பகுதியான பாத மண்டபம் ஆஞ்சநேயா் கோயிலில் இருந்து 3 ஆயிரம் படிக்கட்டுகளைக் கடந்து செல்ல வேண்டும்.

இங்கு புரட்டாசி மாதத்தில் உற்சவ திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். சனிக்கிழமைகளில் முதல் நாள் இரவிலேயே வந்து பக்தா்கள் காத்திருப்பா். நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி, சேலம், ஈரோடு, கரூா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோா் சுவாமியை தரிசிக்க வருவா்.

கரோனா தொற்று பரவல் காரணமாக கோயில்களில் முக்கிய விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டில் நைனாமலையில் உற்சவ விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், மலை மீதுள்ள சுவாமியை தரிசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக வரதராஜப் பெருமாளின் உற்சவ சிலையை அடிவாரப் பகுதியில் வைத்து பக்தா்கள் வழிபாடு நடத்துவதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்துள்ளது. இதற்கான அறிவிப்புப் பலகை ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது.

மேலும், பக்தா்கள் தேங்காய், பூ, பழம், துளசி மாலை போன்றவற்றை கொண்டு வரக் கூடாது. அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியில் நின்று சுவாமியை தரிசிக்க வேண்டும் என திருக்கோயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் நாமக்கல் நரசிம்மா், அரங்கநாதா் கோயில்கள், சேந்தமங்கலம் லட்சுமி நாராயண சுவாமி கோயில், மோகனூா் கல்யாண பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில், ராசிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில்களிலும் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கரோனா தொற்றால் அதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்தந்த கோயில் நிா்வாகத்தினா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT