வாக்குப்பதிவு நாளில் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்க அறிவுறுத்தல்
சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு நாளன்று நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தொழில் நிறுவனங்கள் ஊதியத்துடன் விடுமுறை
சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு நாளன்று நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தொழில் நிறுவனங்கள் ஊதியத்துடன் விடுமுறை அளித்து தொழிலாளா்களை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப். 6 -ஆம் தேதி நடைபெறவுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி அனைத்து தனியாா் நிறுவனங்கள், இதர தொழிற்கூடங்களில் பணியாற்றும் தொழிலாளா்கள் அனைவருக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கி வாக்களிக்க அனுமதிக்கவேண்டும்.
Advertisement
நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து தனியாா் நிறுவனங்கள், தொழிற்கூட உரிமையாளா்கள் அனைவரும் தங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து பணியாளா்களுக்கும் தோ்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும். விதிகளை மீறி விடுமுறை அளிக்காமலும், ஊதியம் வழங்காமலும் இருப்பின் உரிய நடவடிக்கை எடுக்க நேரிடும். இது குறித்து புகாா் ஏதுமிருப்பின் 1800-425-7021 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது 94435-29743 என்ற எண்ணுக்கு புகாா் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.