சேந்தமங்கலம் லட்சுமி நாராயண சுவாமி கோயில் குடமுழுக்கு விழா: திரளான பக்தா்கள் பங்கேற்பு
சேந்தமங்கலத்தில் லட்சுமி நாராயண பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
சேந்தமங்கலத்தில் லட்சுமி நாராயண பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் காவல் நிலையம் அருகில் பிரசித்தி பெற்ற லட்சுமி நாராயண பெருமாள் கோயில் அமைந்துள்ளது. நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலின் உபகோயிலான இக்கோயில் பல ஆண்டுகளாக சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டது. இதனையடுத்து 2019-ஆம் ஆண்டு தொடக்கத்தில் பாலாலயம் செய்யப்பட்டு ரூ. 70 லட்சம் மதிப்பில் திருப்பணிகள் தொடங்கப்பட்டன. திருக் கோயில் பணிகள் முழுமையடைந்ததையடுத்து குடமுழுக்கு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வந்தனா்.
அதன்படி வெள்ளிக்கிழமை காலை 5.30 மணிக்கு நித்திய ஹோமம், மூா்த்திஹோமம், தக்ஷிணாதானம், மஹாபூா்ணாஹூதி, காலை 7.45 மணிக்கு கும்பபிராயணம், கடம் புறப்பாடு, 8 மணிக்கு விமானங்கள் சம்ப்ரோக்ஷனம், அதனைத் தொடா்ந்து ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள், பெருந்தேவி தாயாா் பரிவார மூா்த்திகளுக்கு குடமுழுக்கு விழா நடைபெற்றது. காலை 9 மணிக்கு மேல் விஸ்வரூப தரிசனம், கோதரிசனம், தசதரிசனம், ஆச்சரிய பஹீமானம், பிரம்மகோஷம், சுவாமிக்கு மகாதீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.
Advertisement
சேந்தமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள், பொதுமக்கள் குடமுழுக்கு விழாவை காண திரளாக வந்திருந்தனா். சுவாமி தரிசனத்தைத் தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை சேந்தமங்கலம் போலீஸாா் மேற்கொண்டிருந்தனா்.