முகப்பு
நாமக்கல்

குமாரபாளையத்தில் மாயமான 11 வயது சிறுவன் திண்டுக்கல்லில் மீட்பு

குமாரபாளையத்தில்  வெள்ளிக்கிழமை மாயமான 11 வயது சிறுவன் திண்டுக்கல் அருகே கிராமத்தில் திங்கள்கிழமை மீட்கப்பட்டான்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
மீட்கப்பட்ட சிறுவன் சந்தோஷ்குமாரை பெற்றோரிடம் ஒப்படைக்கும் குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தேவி.
பகிர்:

குமாரபாளையத்தில்  வெள்ளிக்கிழமை மாயமான 11 வயது சிறுவன் திண்டுக்கல் அருகே கிராமத்தில் திங்கள்கிழமை மீட்கப்பட்டான்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பெராந்தர் காடு, பண்ணாரி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கேசவன் - சுமதி தம்பதியினர். கேசவன் உணவு விடுதியில் புரோட்டா மாஸ்டராகவும், சுமதி டெய்லராகவும் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 11, 8 மற்றும் 6 வயதில் 3 மகன்கள் உள்ளனர்.  இவர்களின் மூத்த மகனான, 4-ம் வகுப்பு படிக்கும் சந்தோஷ் குமார் (11) வெள்ளிக்கிழமை காலை முதல் காணவில்லை. 

பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் பெற்றோர் குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தேவியிடம் வெள்ளிக்கிழமை இரவு புகார் அளித்தனர். இதையடுத்து, சிறுவன் மாயமான விவரம் செல்லிடப்பேசி கட்செவி அஞ்சல் மூலம் பரப்பப்பட்டது. மேலும், பேருந்து நிலையம் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த தானியங்கி கேமரா பதிவுகள் ஆராயப்பட்டன. சிறுவனின் புகைப்படத்தை கொண்டு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

அப்போது, ஒரு நடத்துநர் மாயமான சிறுவன் தங்கள் பேருந்தில் ஏறி ஈரோடு பேருந்து நிலையத்துக்கு சென்றதாக தகவல் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து ஈரோடு பேருந்து நிலையத்திற்கு விரைந்த போலீசார் சிறுவனின் உறவினர்கள் அதிகம் வசிக்கும் திண்டுக்கல் செல்லும் அனைத்து பேருந்துகளிலும் ஓட்டுநர், நடத்துநர்  விசாரணை மேற்கொண்டனர். அப்போது அச்சிறுவன் திண்டுக்கல் பேருந்தில் ஏறிச் சென்றது உறுதியானது. 

இதைத் தொடர்ந்து, திண்டுக்கல் விரைந்த போலீசார் அங்கு விசாரணை மேற்கொண்டபோது நல்லாண்டம் எனும் கிராமத்துக்கு சிறுவன் சென்றதும், அங்கு உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை மீட்ட போலீசார் குமாரபாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். விசாரணையில், சிறுவர்களுக்குள் ஏற்பட்ட சிறு சண்டையில் மனவருத்தம் அடைந்து வெள்ளிக்கிழமை காலை வீட்டை விட்டு வெளியேறியதும், அடுத்தடுத்து நான்கு பேருந்துகள் ஏறி திண்டுக்கல் சென்றதும் தெரியவந்தது.

சிறுவனுக்கும் பெற்றோருக்கும் தனித்தனியே கவுன்சலிங் வழங்கப்பட்டு சிறுவன் சந்தோஷ்குமார் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். இரண்டு நாள்களுக்குப் பின்னர் மாயமான சிறுவன் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதால் பெற்றோர் மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் வடித்ததோடு, போலீசாருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். 

முழு கட்டுரையைப் படிக்க →