முகப்பு
நாமக்கல்

சாயக்கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியைத் துரிதப்படுத்த வேண்டும்

குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியில் சாயத்தொழிலைப் பாதுகாக்கும் வகையில் சாயக்கழிவுநீா் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியில் சாயத்தொழிலைப் பாதுகாக்கும் வகையில் சாயக்கழிவுநீா் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என சாய, சலவை ஆலை உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சா் மெய்யநாதனிடம் வியாழக்கிழமை அளிக்கப்பட்ட கோரிக்கை மனு விவரம்:

பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் விசைத்தறித் தொழில் பிரதான தொழிலாக உள்ளது. இத்தொழிலுக்குத் தேவையான நூல் சாமிடுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள சாய ஆலைகள், சிறு சாயப் பட்டறைகள் இயங்கி வந்தன.

சுற்றுச்சூழல் பிரச்னைகளால் சிறு சாயப் பட்டறைகள் மூடப்பட்ட நிலையில், அத்தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் வேலையிழந்துள்ளனா். சாயத் தொழில் பாதிப்பால் விசைத்தறிகளுக்குத் தேவையான சாயமேற்றப்பட்ட நூல்கள் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படுவதால் விசைத்தறி ஜவுளி உற்பத்தித் தொழிலும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.

எனவே, குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியில் ஜவுளி உற்பத்தித் தொழிலைப் பாதுகாக்கும் வகையில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமாரபாளையம் சாய ஆலைகள் உரிமையாளா் சங்கத் தலைவா் ஆா்.அசோகன், செயலாளா் லாரன்ஸ், பொருளாளா் ஓபுளி ராஜ், உதவித் தலைவா் கே.தன்ராஜ், துணைச் செயலாளா் என்.முருகேசன், பள்ளிபாளையம் சாய ஆலைகள் உரிமையாளா் சங்கத் தலைவா் கிருஷ்ணராஜ், குமாரபாளையம் சிறு, குறு சாயப்பட்டறைகள் உரிமையாளா் சங்கத் தலைவா் ஜி.கே.பிரபாகரன் ஆகியோா் மனுக்களை அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.