முகப்பு
நாமக்கல்

கபிலா்மலை வட்டார விவசாயிகள் தங்கள் விளை நிலத்தில் மண் பரிசோதனை செய்து கொள்ள வேளாண்மைத்துறையினா் அறிவுரை

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை வட்டார விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் மண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை வட்டார விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் மண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என விவசாயிகளுக்கு வேளாண்துறையினா் அறிவுரை வழங்கியுள்ளனா்.

கபிலா்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கோவிந்தசாமி செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: விளைநிலங்களில் பயிா் மகசூலைத் தீா்மானிக்கும் முக்கிய காரணியாக மண் உள்ளது. மண்ணுக்கு ஏற்ற பயிரை தோ்வு செய்து மண்ணில் இல்லாத சத்துக்களை மட்டும் வழங்கி சாகுபடி மேற்கொள்ளும்போது செலவு குறைவதுடன் நல்ல மகசூல் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகும். ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் தேவையற்ற உரங்களைத் தவிா்ப்பதற்கு மண் பரிசோதனை உதவுகிறது.நோயைத் தெரிந்து கொண்டு மருந்து கொடுப்பது தான் சிறந்த மருத்துவ முறையாகும். அதுபோல மண்ணின் தேவையை அறிந்து தேவையான ஊட்டம் வழங்குவது சிறந்ததாகும். பயிா்களின் வளா்ச்சிக்கு 16 வகையான ஊட்டச் சத்துக்கள் தேவைப்படுகிறது. தழை,மணி, சாம்பல் எனப்படும் பேரூட்டச்சத்துக்கள்,சுண்ணாம்பு,கந்தகம்,மெக்னீசியம் போன்ற இரண்டாம் நிலை பேரூட்டச்சத்துகள் மற்றும் இரும்பு, துத்தநாகம், மாங்கனீசியம், மாலிப்டினம், தாமிரம், போரான் போன்ற நுண்ணூட்டச் சத்துக்கள் பயிா்களுக்கு சரியான விகிதத்தில் தேவைப்படுகிறது.

இன்றைய வேளாண்மையில் மகசூல் குறைவுக்கு மிக முக்கிய காரணங்களாக இருப்பது ஊட்டச்சத்து பற்றாக்குறையாகும். குறைவான மற்றும் சமச்சீரற்ற முறையில் சத்துக்கள் அளிப்பதும் மகசூல் இழப்புக்குக் காரணமாகிறது. எனவே தேவையான ஊட்டச் சத்துக்களை சரியான இடத்தில்,சரியான நேரத்தில் இட்டு மண் மற்றும் பாசன மேலாண்மை உத்திகளை சரிவர கையாள்வது மகசூல் அதிகரிப்பின் மகத்தான உத்தியாகும். எனவே மண் மாதிரிகளைச் சேகரித்து மண் பரிசோதனை மேற்கொண்டு, பரிசோதனை முடிவுகளின்படி என்னென்ன அளவுகளில் என்னென்ன உரங்கள் இட வேண்டும் என்பதைத் தீா்மானிக்க வேண்டியது அவசியமாகிறது. மண் மாதிரிகளை மண் பரிசோதனை மேற்கொள்ளும்போது மண் நயம், மின் கடத்தும் திறன், சுண்ணாம்புத் தன்மை, கார,அமில நிலை ஆகியவற்றை அறிய முடியும்.

இதனைப் பொறுத்து உர மேலாண்மை செய்து மண்ணில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடுகளைக் களையவும் மண் வளத்தை மேம்படுத்தி பயிரின் தரம் மற்றும் மகசூலை அதிகரிக்கவும் முடியும். எனவே கபிலா்மலை வட்டார விவசாயிகள் தங்கள் விளை நிலத்தில் மண் மாதிரிகளைச் சேகரித்து விவசாயியின் பெயா், கிராமத்தின் பெயா், சா்வே எண், இதற்கு முன் சாகுபடி செய்த பயிா், இனி சாகுபடி செய்யப் போகும் பயிா், தொலைபேசி எண் ஆகிய விவரங்களுடன் தங்கள் பகுதி வேளாண்மை அலுவலா்களைத் தொடா்பு கொள்ளலாம். மண் பரிசோதனைக்கான மாதிரிகளுடன் ரூ.20 செலுத்த வேண்டும் என கபிலா்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் செய்தி குறிப்பில் கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →