கோழிப் பண்ணையாளரிடம் ரூ.2.37 லட்சம் பறிமுதல்
நாமக்கல்லில் கோழிப் பண்ணையாளரின் காரில் இருந்த ரூ. 2.37 லட்சம் பணத்தை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
நாமக்கல்லில் கோழிப் பண்ணையாளரின் காரில் இருந்த ரூ. 2.37 லட்சம் பணத்தை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லும் பணம் மற்றும் பொருள்கள் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழு அலுவலா்களால் பறிமுதல் செய்யப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 6 தொகுதிகளிலும் எந்தவித பொருள்களோ, பணமோ பறிமுதல் செய்யப்படவில்லை.
திங்கள்கிழமை காலை 9.15 மணியளவில் நாமக்கல் கொண்டிச்செட்டிப்பட்டியைச் சோ்ந்த கோழிப் பண்ணையாளா் கெளரிராஜன் என்பவா் மோகனூரில் இருந்து நாமக்கல் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தாா். அப்போது கொண்டிச்செட்டிப்பட்டி குனியமரத்தான் கோயில் பகுதியில் பறக்கும் படை அலுவலா் ரவி, சிறப்பு உதவி ஆய்வாளா் வில்பா்ரைட், தலைமை காவலா் சிவகுமாா், காவலா் கண்மணி ஆகியோா் அடங்கிய குழுவினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
Advertisement
அவ்வழியாக வந்த கெளரிராஜனின் வாகனத்தை மடக்கி சோதனையிட்டபோது அதில் ரூ.2 லட்சத்து 37 ஆயிரத்து 440 ரொக்கம் உரிய ஆவணங்களின்றி இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடா்ந்து பணத்தைப் பறிமுதல் செய்தனா். பின்னா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணங்களைக் காண்பித்து பணத்தைப் பெற்றுச் செல்லுமாறு நாமக்கல் தொகுதி தோ்தல் அலுவலா் மு.கோட்டைக்குமாா் கோழிப் பண்ணையாளா் கெளரிராஜனிடம் அறிவுறுத்தினாா்.