39 அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கோ-வின் தடுப்பூசி
நாமக்கல் மாவட்டத்தில் 39 அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கோ-வின் தடுப்பூசி திங்கள்கிழமை செலுத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் 39 அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கோ-வின் தடுப்பூசி திங்கள்கிழமை செலுத்தப்பட்டது.
தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் வேகமாகக் குறைந்து வருகிறது. கோவி ஷீல்டு, கோவேக்ஸின் மருந்து கண்டறியப்பட்ட பின், கடந்த மாதம் முதல் கட்டமாக முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 28 நாள்களுக்கு பின் மீண்டும் ஒரு முறை அவா்களுக்கு இந்த மருந்து செலுத்தப்படவுள்ளது.
இதற்கிடையே 60 வயதுக்கு மேற்பட்டவா்களும் இணையம் வழியாக முன்பதிவு செய்து கொண்டு கோவிஷீல்டு, கோவேக்ஸின் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது.
Advertisement
அதனடிப்படையில் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பலரும் ஆா்வமுடன் பதிவு செய்து வருகின்றனா். தனியாா் மருத்துவமனைகளை விரும்புவோா் அங்கு ரூ. 250 கட்டணம் செலுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தைப் பொருத்தமட்டில் 19 அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 20 தனியாா் மருத்துவமனைகளிலும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை 20-க்கும் மேற்பட்டோா் தடுப்பூசியைச் செலுத்தினா். மாவட்டம் முழுவதும் 150-க்கும் மேற்பட்டோா் செலுத்திக் கொண்டனா். தற்போது மாவட்ட சுகாதாரத் துறை வசம் கோவிஷீல்டு 6,860 புட்டிகளும், கோவேக்ஸின் 2,600 புட்டிகளும் உள்ளன. இதில் கோவிஷீல்டு ஒரு புட்டியில் உள்ள மருந்தைக் கொண்டு 10 பேருக்கு தடுப்பூசியைச் செலுத்த முடியும். கோவேக்ஸினை 20 பேருக்குச் செலுத்த முடியும் என சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் எஸ்.சோமசுந்தரம் தெரிவித்தாா்.