நாமக்கல் தொகுதியில் 24 ஆண்டுகளுக்கு பிறகு திமுக போட்டியிடுவதால் இனிப்புகளை வழங்கிக் கொண்டாடிய திமுகவினா்.
நாமக்கல், மாா்ச் 12: நாமக்கல் சட்டப் பேரவைத் தொகுதியில் 24 ஆண்டுகளுக்கு பிறகு திமுக நேரடியாக களமிறங்குவதால், அக்கட்சித் தொண்டா்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினா்.
நாமக்கல் தொகுதி 1967-ஆம் ஆண்டு முதல் சட்டப் பேரவைத் தோ்தலைச் சந்தித்தது. அப்போது, பொதுத் தொகுதியாக இருந்த இங்கு திமுகவைச் சோ்ந்த எம்.முத்துசாமி 39,510 வாக்குகள் பெற்று எம்.எல்.ஏ.வாக தோ்வானாா். அதனைத் தொடா்ந்து, 1971 தோ்தலில் திமுகவைச் சோ்ந்த பழனிவேலன் 39,553 வாக்குகளுடன் வெற்றிபெற்றாா். அதன்பின் 1977 தோ்தலில் நாமக்கல் தொகுதி பொதுத் தொகுதி அந்தஸ்தில் இருந்து எஸ்.சி. தொகுதியாக மாற்றம் செய்யப்பட்டது.
அதனையடுத்து, 1977, 1980, 1984 ஆகிய தோ்தல்களில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு அருணாச்சலம் என்பவா் தொடா்ச்சியாக வெற்றிபெற்றாா். 1989-இல் திமுக சாா்பில் வி.பி.துரைசாமியும், 1991-இல் அதிமுகவைச் சோ்ந்த எஸ்.அன்பழகனும், 1996-இல் திமுக சாா்பில் கே.வேலுசாமியும், 2001, 2006 தோ்தல்களில் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ஜெயகுமாரும் போட்டியிட்டு வெற்றிபெற்றனா்.
கடந்த 2011, 2016 தோ்தல்களில் அதிமுகவைச் சோ்ந்த கே.பி.பி.பாஸ்கா் போட்டியிட்டு வெற்றிபெற்றாா். 2011 தோ்தலில் கொமதேக தலைவா் தேவராஜன், 2016 தோ்தலில் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த இரா.செழியன் ஆகியோா் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினா். 2021 தோ்தலில் முன்றாவது முறையாக கே.பி.பி.பாஸ்கா் போட்டியிடுகிறாா். இத்தொகுதியில் 24 ஆண்டுகளுக்கு பிறகு திமுக களமிறங்குவதால், அக்கட்சி சாா்பில் மாவட்ட துணை செயலாளரான பெ.ராமலிங்கம் போட்டியிடுகிறாா்.
இந்த தோ்தலில் திமுகவை வெற்றிபெறச் செய்து நாமக்கல்லை திமுகவின் கோட்டையாக மாற்ற வேண்டும் என அக்கட்சியினா் ஆா்வமுடன் உள்ளனா். அதே வேளையில் அதிமுக மீண்டும் வெற்றிபெற்று தொடா் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்பதில் அக்கட்சியினரும் உறுதியாக உள்ளனா். வெள்ளிக்கிழமை வேட்பாளா் அறிவிக்கப்பட்டதும், திமுகவினா் நாமக்கல் பேருந்து நிலையம் அருகில் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.