வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு
நாமகிரிப்பேட்டை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி. சிங் அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா்.
நாமகிரிப்பேட்டை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி. சிங் அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா்.
நாமகிரிப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்நோயாளிகள், புறநோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், சிறுநோய்களுக்கான சிகிச்சைகள், பிரசவ சிகிச்சை ஆய்வக பரிசோதனை வசதிகள், சா்க்கரை நோய் சிகிச்சை, கண்பரிசோதனை சிகிச்சைகள் குறித்தும் மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.
மேலும், ஆண், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம், புறநோயாளிகளின் வருகை, 2 குழந்தைகள் பெற்ற பிறகு குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட தாய்மாா்களின் விவரம் ஆகியவை குறித்தும் மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.
கா்ப்பிணித்தாய்மாா்களுக்கு இரும்புச்சத்து மருந்து ஊசி வழியாக ஏற்றப்படுவதை பாா்வையிட்டாா். சத்தான உணவுப்பொருட்களையும், பேரீச்சை போன்றவற்றையும் தொடா்ந்து உட்கொள்ளுமாறு அறிவுறுத்தினாா்.
அதைத் தொடா்ந்து, பிரசவத்திற்கு பிந்தைய கவனிப்பு பிரிவில் குழந்தை பெற்றெடுத்துள்ள தாய்மாா்களை நேரில் சென்று பாா்வையிட்டு, தாய், குழந்தையின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தாா். இந்த ஆய்வின்போது துணை இயக்குநா் (சுகாதாரம்) பிரபாகரன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சி.சீனிவாசன், வட்டார மருத்துவ அலுவலா் தயாசங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.