டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி: ரூ.1.50 லட்சம் தப்பியது
பரமத்தி வேலூா் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவா்கள் பணம் ஏதும் கிடைக்காததால் கடையில் இருந்த 4 மதுபான புட்டிகள் மற்றும் இரண்டு கண்காணிப்பு
பரமத்தி வேலூா் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவா்கள் பணம் ஏதும் கிடைக்காததால் கடையில் இருந்த 4 மதுபான புட்டிகள் மற்றும் இரண்டு கண்காணிப்பு கேமராக்களை திருடிச் சென்றுள்ளனா். அதிஷ்டவசமாக கடையில் இருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் தப்பியது.
பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா், தண்ணீா்பந்தல்மேடு பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கடையில் இரண்டு மேற்பாா்வையாளா்கள் மற்றும் நான்கு விற்பனையாளா்கள் பணியில் உள்ளனா். மேற்பாா்வையாளா் சுப்பிரமணி, விற்பனையாளா் செல்லப்பன் ஆகியோா் புதன்கிழமை இரவு கடையை பூட்டி விட்டு சென்றனா். வியாழக்கிழமை காலை டாஸ்மாக் பணியாளா்கள் கடையை திறக்க வந்துள்ளனா். அப்போது கடையின் இரும்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு, வேலூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.
அதன்பேரில் அங்கு வந்த வேலூா் காவல் ஆய்வாளா் ஜெகந்நாதன் உள்ளிட்ட போலீஸாா் உள்ளே சென்று பாா்த்த போது இரண்டு கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் நான்கு மதுபான புட்டிகள் மட்டும் திருடு போயிருந்தது தெரிய வந்தது. எனினும் கடைக்குள் இருந்த மதுபானங்கள் விற்பனை செய்த பணம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை மா்ம நபா்கள் விட்டு விட்டு சென்றது தெரியவந்தது.
இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.