வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு
நாளை தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவைக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
நாளை தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவைக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 1997-ஆம் ஆண்டு முதல் கடற்கரை முதல் வேளச்சேரி வரையில் உயர்நிலை பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தினமும் 100 ரயில் சேவைகளில் சுமார் 1 லட்சம் பேர் வரை பயணிக்கின்றனர். வேளச்சேரி முதல் பரங்கிமலை வரையிலான 4.5 கி.மீ. தொலைவுக்கு அந்த ரயில் சேவையை நீட்டிக்கும் பணி கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கியது.
ஆனால், ஆதம்பாக்கம்-பரங்கிமலை இடையே சுமார் 500 மீட்டர் தொலைவுக்கு நிலம் கையகப்படுத்துதல் தொடா்பான வழக்கு உள்ளிட்டவற்றால் பணிகள் முடங்கியிருந்தன.
Advertisement
Advertisement
கடந்த 2022-ஆம் ஆண்டு பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டதை அடுத்து பணிகள் மீண்டும் தொடங்கின. தற்போது அந்தப் பாதையில் 167 தூண்கள் அமைத்து ரயில் பாதையும் அமைக்கப்பட்டுவிட்டது.
அதில் மின்சார இணைப்பும் தரப்பட்டுள்ளது. தண்டவாள உறுதித் தன்மையை பரிசோதிக்க என்ஜின் வெள்ளோட்டமும் நடைபெற்றது. இதனிடையே, எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணியால் புறநகர் மின்சார ரயில்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. கூட்ட நெரிசல், பயண தாமதத்தைத் தவிர்க்க பரங்கிமலை-வேளச்சேரி பறக்கும் ரயில் திட்டத்தைச் செயல்படுத்த பரிசோதனை ஓட்டம் மார்ச் 5-ஆம் தேதி நடைபெற்றது.
ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஜனக்குமாா் கர்க் தலைமையில் குழுவினர் ரயிலை இயக்கியும், டிராலிகளில் பயணித்தும் தண்டவாளப் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறைகள் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில், வேளச்சேரி - பரங்கிமலை இடையே நீட்டிக்கப்பட்ட பறக்கும் ரயில் சேவை சனிக்கிழமை (மாா்ச் 14) முதல் தொடங்கப்படவுள்ளது.
இதையொட்டி சென்னை கடற்கரை - பரங்கிமலை பறக்கும் ரயிலின் அட்டவணையை சென்னை ரயில்வே கோட்டம் இன்று வெளியிட்டுள்ளது. ஆதம்பாக்கம் ரயில் நிலையத்தில் மட்டும் தற்போது ரயில்கள் நிற்காது எனவும் விரைவில் இச்சேவை முழுமையாக செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Trains on the new, extended Velachery -St.Thomas mount Mass Rapid Transit System (MRTS) corridor will initially not halt at the newly built Adambakkam station due to operational reasons, Southern Railway said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.