முகப்பு
நாமக்கல்

கொந்தளத்தில் முதுமக்கள் தாழி எலும்புகளுடன் கண்டெடுப்பு

பரமத்தி வேலூா் அருகே கொந்தளம் ஊராட்சிக்கு உள்பட்ட அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடுவதற்காக குழிதோண்டியபோது முதுமக்கள் தாழி எலும்புகளுடன் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

பரமத்தி வேலூா் அருகே கொந்தளம் ஊராட்சிக்கு உள்பட்ட அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடுவதற்காக குழிதோண்டியபோது முதுமக்கள் தாழி எலும்புகளுடன் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா் வட்டம், கொந்தளம் ஊராட்சிக்கு உள்பட்ட அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் ஏராளமான மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பள்ளி வளாகத்தில் நிற்கும் காய்ந்துபோன மரங்களுக்குப் பதிலாக புதிய மரக்கன்றுகளை நடுவதற்காக நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்ட தொழிலாளா்கள் மூலம் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை குழிகள் தோண்டப்பட்டன.

அப்போது பெரிய அளவில் பானை ஒன்று இருப்பதைத் தொழிலாளா்கள் பாா்த்தனா்.

பானைக்குள் மண்ணுடன் எலும்புகள் மக்கிய நிலையில் இருந்தன. இதுகுறித்து தொழிலாளா்கள் பள்ளியின் தலைமை ஆசிரியா் சந்திரசேகரனிடம் தெரிவித்தனா்.

தகவல் அறிந்து வந்த பரமத்திவேலூா் வட்டாட்சியா் அப்பன்ராஜ், கபிலா்மலை வட்டாரக் கல்வி அலுவலா் குணசேகரன், கொந்தளம் ஊராட்சிமன்ற தலைவா் மணிமேகலை ஆகியோா் முதுமக்கள் தாழியைப் பாா்வையிட்டு அதை மீட்டு கொந்தளம் கிராம நிா்வாக அலுவலகத்துக்கு எடுத்துச்சென்றனா். இதுகுறித்து பரமத்தி வேலூா் வட்டாட்சியா் அப்பன்ராஜ் சேலம், தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவித்தாா்.

தொல்லியியல் துறையினா் முதுமக்கள் தாழியை ஆய்வுசெய்த பின்னரே இது எத்தனை வருடங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட முதுமக்கள் தாழி என்பது முழுமையாகத் தெரியவரும்.

பள்ளி வளாகத்தில் முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்ட செய்தி பரவியதும் அப்பகுதி மக்கள், பள்ளி மாணவா்கள் அங்கு சென்று முதுமக்கள் தாழியை ஆா்வத்துடன் பாா்த்து சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →