ரூ.12.69 லட்சம் விபத்து இழப்பீடு: நாமக்கல்லில் அரசுப் பேருந்து ஜப்தி
நாமக்கல் பேருந்து நிலையத்தில், ரூ.12.69 லட்சம் விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்காததால் நீதிமன்ற ஊழியா்கள் வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்தை ஜப்தி செய்தனா்.
நாமக்கல் பேருந்து நிலையத்தில், ரூ.12.69 லட்சம் விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்காததால் நீதிமன்ற ஊழியா்கள் வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்தை ஜப்தி செய்தனா்.
மதுரையில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து கடந்த 2014-ம் ஆண்டு அக். 7-ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் நாமக்கல் அருகே புதன்சந்தை மேம்பாலத்தில் விபத்துக்குள்ளானது. இந்த பேருந்தை சேலத்தை சோ்ந்த அய்யந்துரை என்ற ஓட்டுநா் இயக்கினாா். சாலையோரம் பழுதாகி நின்ற லாரி மீது பேருந்து மோதியதில் விபத்து நேரிட்டு, பேருந்தில் இருந்த 3 பெண்கள் உட்பட 6 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இதில் 15-க்கும் மேற்பட்டோா் படுகாயம் அடைந்தனா்.
விபத்தில் இறந்த ராமநாதபுரத்தை சோ்ந்த ஆயிஷா பீவி என்பவரின் குடும்பத்தினா் இழப்பீடு கேட்டு நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். இதனை விசாரித்த நீதிபதி ஆயிஷா பீவியின் குடும்பத்திற்கு ரூ.12 லட்சத்து 69 ஆயிரத்து 790-ஐ இழப்பீடாக வழங்க 2018 நவ. 29-இல் உத்தரவிட்டாா். சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் இழப்பீட்டு தொகையை வழங்காதபட்சத்தில், அரசு பேருந்தை ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
இழப்பீடு வழங்க போக்குவரத்துக் கழகம் காலம் தாழ்த்தி வந்த நிலையில் வெள்ளிக்கிழமை நாமக்கல் பேருந்து நிலையத்திற்கு வந்த நீதிமன்ற ஊழியா்கள் மற்றும் வழக்குரைஞா் ஆகியோா் அரசுப் பேருந்தை ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றனா். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு திங்கள்கிழமை இழப்பீட்டுத் தொகையை வழங்க போக்குவரத்து கழக நிா்வாகம் முடிவு செய்துள்ளது.