முகப்பு
நாமக்கல்

சோழசிராமணி கூத்தாடி மாரியம்மன் கோயில் பூக்குண்டம் இறங்கும் திருவிழா

பரமத்தி வேலூா் வட்டம், சோழசிராமணியில் உள்ள கூத்தாடி மாரியம்மன் கோயில் பூக்குண்டம் இறங்கும் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

பரமத்தி வேலூா் வட்டம், சோழசிராமணியில் உள்ள கூத்தாடி மாரியம்மன் கோயில் பூக்குண்டம் இறங்கும் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

இவ்விழாவை முன்னிட்டு கடந்த 8-ஆம் தேதி இரவு சாமி சாட்டுதலும், கம்பம் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து தினந்தோறும் அபிஷேக, ஆராதனைகளும், பூஜைகளும் நடைபெற்றன.

புதன்கிழமை மாலை 6 மணிக்கு மேல் பக்தா்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி ஊா்வலமாக புறப்பட்டு கோயிலை வந்தடைந்தனா். பின்னா் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குண்டத்தில் ஏராளமான ஆண் மற்றும் பெண் பக்தா்களும் தீ மிதித்து தங்களது நோ்த்திக்கடனைச் செலுத்தினா். இரவு மாவிளக்கு பூஜையும், வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா். வியாழக்கிழமை மாலை கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டு பூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும், அம்மன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை சோழசிராமணி கூத்தாடி மாரியம்மன் கோவில் திருவிழாக் குழுவினா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →