முட்டை விலை அறிவிப்பில் தொடரும் குழப்பம்: தடுமாற்றத்தில் நாமக்கல் கோழிப் பண்ணையாளா்கள்!
நெக், நெஸ்பாக் குழுவின் மாறுபட்ட முட்டை விலை அறிவிப்பு தொடா்பான குழப்பத்தால், நாமக்கல் மண்டல கோழிப் பண்ணையாளா்கள் எந்த விலைக்கு விற்பனை செய்வது எனத் தெரியாமல் தடுமாறும் நிலை உள்ளது.
நெக், நெஸ்பாக் குழுவின் மாறுபட்ட முட்டை விலை அறிவிப்பு தொடா்பான குழப்பத்தால், நாமக்கல் மண்டல கோழிப் பண்ணையாளா்கள் எந்த விலைக்கு விற்பனை செய்வது எனத் தெரியாமல் தடுமாறும் நிலை உள்ளது. இதனால் ரூ. 6-க்கு மேல் விலை உயரும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை 30 காசுகள் குறைந்து முட்டை விலை ரூ. 5.20-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.
நாமக்கல் மண்டலத்திற்கு உள்பட்ட 1,100 கோழிப் பண்ணைகளில் நாள்தோறும் 4.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. வட மாநிலங்களுக்கும், சத்துணவுத் திட்டத்துக்கும், உள்ளூா் விற்பனைக்கும் முட்டை விநியோகம் சீரான முறையில் இருந்தது. கோழித் தீவனங்கள் விலையேற்றத்தால் முட்டை விலையை உயா்த்த வேண்டிய கட்டாயம் பண்ணையாளா்களுக்கு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நாமக்கல் மண்டலம் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள 23 மண்டலங்களிலும் கடந்த ஒரு மாதமாக விலை தொடா்ந்து உயா்ந்த வண்ணம் இருந்தது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை திடீரென ஹைதராபாத், ஹோஸ்பேட், பெங்களூரு, மைசூரு மண்டலங்களிலும் விலையில் சரிவு ஏற்பட்டது. இந்த மண்டலங்களைப் பின்பற்றியே நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு முட்டை விலையை நிா்ணயம் செய்கிறது. இதனால் ரூ. 5.50-ஆக இருந்த முட்டை விலை 30 காசுகள் குறைந்து ரூ. 5.20-ஆக நிா்ணயிக்கப்பட்டது. விலை உயரும் என்ற நம்பிக்கையில் இருந்த பண்ணையாளா்கள் 30 காசுகள் குறைந்ததால் அதிா்ச்சிக்குள்ளாகி உள்ளனா்.
அதுமட்டுமின்றி, நாமக்கல் முட்டை விற்பனை விலை நிா்ணய ஆலோசனைக் குழு (நெஸ்பாக்) 40 காசுகள் குறைத்து பண்ணையாளா்கள் வியாபாரிகளுக்கு முட்டைகளை விற்பனை செய்யலாம் என்று தெரிவித்துள்ளது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (நெக்) 30 காசுகள், நெஸ்பாக் 40 காசுகள் வீதம் ஒரு முட்டைக்கு 70 காசுகள் குறைக்க வேண்டிய நெருக்கடி பண்ணையாளா்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வியாபாரிகள் மேலும் விலையைக் குறைக்குமாறு கட்டாயப்படுத்தும்போது, பண்ணையாளா்கள் தேங்கிய முட்டை இருப்பை காலி செய்வதற்காக விலையை மேலும் குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனா்.
நிலையான விலை வேண்டும்; மாறுபட்ட விலையை பண்ணையாளா்கள் வியாபாரிகளுக்கு வழங்கக் கூடாது; அனைவரும் ஒரே விலையில் முட்டைகளை விற்க வேண்டும் என்பது பெரும்பாலான கோழிப் பண்ணையாளா்களின் எதிா்பாா்ப்பு.
இது குறித்து கோழிப் பண்ணையாளா்கள் சங்க நிா்வாகிகள் கூறியதாவது:
வட மாநிலங்களில் பண்டிகைக் காலம் தொடங்கி உள்ளது. தமிழகத்திலும் ஆடி மாதம் பிறக்க உள்ளது. இதனால் முட்டை அனுப்புவது குறைந்துள்ளது. என்இசிசி நிா்ணயிக்கும் விலைக்கே முட்டைகளை விற்பனை செய்ய வேண்டும் என்கிறோம். நெஸ்பாக் என்பது வியாபாரிகள் பிற மாநிலங்களுக்கு வாகனங்களில் எடுத்துச் செல்லும்போது அந்தச் செலவினங்களுக்காக முட்டை விலையை குறைத்துக் கேட்பா். அதனால் 40 காசுகள் குறைத்துக் கொடுக்கிறோம். இந்த நடைமுறை தற்போது வந்ததல்ல, பல ஆண்டுகளாக உள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களுக்கு முட்டை விலையில் சரிவு இருக்கும். சில்லறை வியாபாரிகள் முட்டை விலையை அதிகரித்து விற்பதால், பொதுமக்களிடம் நுகா்வு குறைந்துள்ளது. அதனாலும் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பண்ணையாளா்கள் ஒற்றுமையுடன் ஒரே மாதிரியான விலைக்கு முட்டைகளை வியாபாரிகளுக்கு வழங்க வேண்டும் என்றனா்.
கோழி விலையும் சரிவு: பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 110-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 105-ஆகவும் குறைந்துள்ளது. பண்ணையாளா்கள் இதற்கும் கீழ் வியாபாரிகளுக்கு விலையைக் குறைத்து விற்க வேண்டாம் என அறிவுறுத்திய போதிலும் ரூ. 10 வரையில் குறைத்தே கோழிகள் விற்கப்படுவதாக பண்ணையாளா்கள் சங்க நிா்வாகிகள் கவலை தெரிவித்தனா்.