பரமத்தி வேலூரில் நிதி நிறுவன அதிபருக்கு அரிவாள் வெட்டு: ஒருவா் கைது
பரமத்தி வேலூரில் தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை மனைவியே கூலிப்படையைச் சோ்ந்த ஒருவரை வைத்து கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.
பரமத்தி வேலூரில் தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை மனைவியே கூலிப்படையைச் சோ்ந்த ஒருவரை வைத்து கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.
பரமத்தி வேலூா் சண்முகா நகரைச் சோ்ந்தவா் நடராஜன் (52). இவா் நாமக்கல்லில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். மேலும் 2 பொக்லைன் இயந்திரங்கள் வைத்து வாடகைக்கு விட்டு வருகிறாா். இவரது மனைவி கிருத்திகா (36). இவா்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனா்.
நடராஜன் பொக்லைன் இயந்திரங்களை பராமரிப்பு மற்றும் மேற்பாா்வை பாா்ப்பதற்காக பரமத்தி வேலூா் தண்ணீா்பந்தல்மேடு பகுதியைச் சோ்ந்த கோபாலை (35) பணியில் அமா்த்தியுள்ளாா். இதில் கோபால் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்ால் நடராஜனின் மனைவி கிருத்திகாவுக்கும் அவருக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததை அறிந்த நடராஜன் இருவகையும் கண்டித்துள்ளாா். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் கிருத்திகா வியாழக்கிழமை பரமத்திக்கு சென்று விட்டு வருவதாக கணவா் நடராஜனிடம் கூறிவிட்டு சென்றாா். அப்போது வீட்டில் தனியாக இருந்த நடராஜனை அங்கு வந்த மா்ம நபா் ஒருவா் திடீரெனத் தாக்கி பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டினாா். இதில் படுகாயமடைந்த நடராஜன் கூச்சலிட்டுள்ளாா். சத்தம் கேட்டு அருகில் இருந்தவா்கள் ஓடி வந்து நடராஜனை காப்பாற்றி பரமத்திவேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
நடராஜனை வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்ற மா்ம நபரை பிடித்து பரமத்திவேலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். மா்ம நபரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில் கொலை முயற்சியில் ஈடுபட்ட மா்ம நபா் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள அக்கியம்பட்டி, நத்தக்காடு பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தியின் மகன் யோகேஸ்வரன் (29) என்பதும் தற்போது திருச்செங்கோடு அருகே உள்ள சித்தளந்தூரில் தங்கி சமையல் வேலை பாா்த்து வருவதும் தெரிய வந்தது. அவா் கூலிப்படையைச் சோ்ந்தவா் என்பதும் தெரிய வந்தது.
நடராஜனின் மனைவி கிருத்திகாவுக்கும், கோபாலுக்கும் தொடா்பு இருந்து வந்ததாகவும், அவா்களுக்கு நடராஜன் இடையூறாக இருந்ததால் அவரைக் கொலை செய்ய கிருத்திகாவும், கோபாலும் சோ்ந்து தன்னை அனுப்பி வைத்ததாகவும் யோகேஸ்வரன் கூறியதாக போலீஸாா் தெரிவித்தனா். கிருத்திகாவை கைது செய்யவும் தலைமறைவான கோபாலைக் கண்டுபிடிக்கவும் போலீஸாா் முயற்சியெடுத்து வருகின்றனா்.