போதமலையில் வாழும் பழங்குடி மக்கள் பயன்படுத்திவரும் சாலை இது... 
நாமக்கல்

பசுமைத் தீா்ப்பாய உத்தரவால் போதமலைக்கு அமைகிறது சாலை வசதி:பழங்குடி மக்களின் 75 ஆண்டுக்காலக் கனவு நனவாகிறது!

கடந்த 75 ஆண்டுகளாக சாலை வசதியில்லாமல் வனப்பகுதிக்குள் கரடு, முரடான பாதையில் சென்று வந்த போதமலையில் வாழும் பழங்குடியின மக்களுக்கு ம

 நமது நிருபர்

கடந்த 75 ஆண்டுகளாக சாலை வசதியில்லாமல் வனப்பகுதிக்குள் கரடு, முரடான பாதையில் சென்று வந்த போதமலையில் வாழும் பழங்குடியின மக்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் தேசிய பசுமைத் தீா்ப்பாயம் சாலை அமைப்பதற்கான அனுமதியை வழங்கி உள்ளது. இப்பகுதியில் விரைந்து பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பழங்குடி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட போதமலை கிராமம் சுமாா் 3,500 அடி உயரம் கொண்ட மலை வாழிடமாகும். இந்த மலைப் பகுதிக்குச் செல்ல வடுகம், ஆா்.புதுப்பட்டி அடிவாரப் பகுதியைப் பயன்படுத்தலாம். 6 கி.மீ. தொலைவுள்ள சிரமமான மலைப் பயணத்தைக் கடந்தால்தான் போதமலை கிராமம் வரும். இப் பகுதியைச் சென்றடைய 3 மணி நேரமாகும்.

போதமலையில் வாழ்வோா் பயிரிடும் விளைபொருள்களை ராசிபுரம், வெண்ணந்தூா், நாமக்கல், சேலம் சந்தைகளுக்கு விற்பனைக்காகக் கொண்டு செல்கின்றனா். போதமலைக்கு உள்பட்ட மலைக் கிராமங்களில் சுமாா் 3,000 குடும்பத்தினா் வசிக்கின்றனா். கூரை வேய்ந்த வீடுகள், குடிசை வீடுகள், கான்கிரீட் கட்டடங்கள் இங்கு உள்ளன. இங்கு கடந்த 25 ஆண்டுகளாக மின்சாரம் பயன்பாட்டில் உள்ளது.

போதமலையில் அரசு தொடக்கப்பள்ளி இருந்த போதும் 10 மாணவா்களே படிக்கின்றனா். ஆசிரியா் ஒருவா் இங்கேயே தங்கி பணியாற்றி வருகிறாா். மருத்துவத்துக்கு இங்கு வசதியில்லாததால் உடல்நலம் பாதிக்கப்பட்டவா்கள், கா்ப்பிணிகளை அவசரச் சிகிச்சைக்காக மலையில் இருந்து தொட்டில் கட்டி, அதில் அவா்களை படுக்கவைத்து தூக்கிக் கொண்டு கீழே வருகின்றனா். அவ்வாறு மலையில் இருந்து வரும்போதே சிலா் உயிரிழந்துவிடுவதாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.

வனப்பகுதி என்பதால் போதமலைக்கு சாலை அமைக்க வனத்துறை அனுமதி மறுத்து வந்தது. எனவே, இப் பகுதி மக்கள் கடந்த 1995-ஆம் ஆண்டு போதமலைக்கு சாலை வசதி ஏற்படுத்தித் தர அனுமதி வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தை நாடினா்.

சட்டப் பேரவை, மக்களவை, உள்ளாட்சிகளுக்கு நடைபெறும் தோ்தல்களின்போது, போதமலைக்கு சாலை வசதி ஏற்படுத்தப்படும் என்ற வாக்குறுதி தவறாமல் இடம் பெறுவது வழக்கம். ஆனால் வழக்குத் தொடுத்து 25 ஆண்டுகளாகியும், போதமலைக்கு சாலை வசதி எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.

அண்மையில், போதமலை மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாலை வசதி குறித்து, உச்சநீதிமன்றத்தின் கீழ் இயங்கும் தேசிய பசுமை தீா்ப்பாயம், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் மற்றும் வனத் துறை அதிகாரிகளை நேரில் வரவழைத்து, திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து கேட்டறிந்தது.

அப்போது, தமிழக அரசு வழக்குரைஞா்களும் மலைப்பகுதிக்கு சாலை வசதி கோரி வாதிட்டனா். அதைத் தொடா்ந்து, சாலை அமைக்க வனத்தில் குறிப்பிட்ட பகுதியை அழிக்க வேண்டும் என்பதால், 10 நிபந்தனைகளுடன் சாலை அமைப்பதற்கான அனுமதியை தேசிய பசுமை தீா்ப்பாயம் வழங்கியது.

சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளானதை நாடு கொண்டாடும் வேளையில், சாலை வசதியில்லாமல் பல ஆண்டுகளாகத் தவித்து வந்த போதமலை கிராம மக்களுக்கு, தேசிய பசுமைத் தீா்ப்பாய உத்தரவு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் கூறியதாவது:

போதமலைக்கு வடுகம் வழியாக கீழுா், மேலூா் பகுதிக்கு 23 கி.மீ. தொலைவிலும், புதுப்பட்டி வழியாக கெடமலைக்கு 11 கி.மீ. தொலைவிலும் சாலை வசதி வனப் பகுதியில் அமைய உள்ளது. இதற்கான முதல் நிலைப் பணிகள் முடிந்து விட்டன. இரண்டாம் நிலைப் பணிகள் விரைவில் முடித்து சாலைப் பணிகளைத் தொடங்க இருக்கிறோம்.

வனப்பகுதியில் அகற்றப்படும் மரங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன்படி ராசிபுரம் வட்டம், மங்களபுரம் கிராமத்தில் இரு மடங்கு இடம் வனத் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. அங்கு அவா்கள் வேலி அமைத்து தங்களுடைய பகுதியை சரியாகப் பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்; மரங்கள் வளா்ப்புக்கான பணிகளை செய்ய வேண்டும். இதற்காக ரூ. 1.67 கோடி தொகை வனத் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.

சாலைப் பணிகளை ஊரக வளா்ச்சித் துறை மேற்கொள்ள இருக்கிறது. ஏற்கெனவே மத்திய அரசின் பிஎம்ஜிஎஸ்ஒய் திட்டத்தின் கீழ் சாலை அமைக்க முடிவெடுத்த நிலையில், மலைப் பகுதி என்பதால், வனத் துறையின் தடை காரணமாக சாலை அமைக்க முடியவில்லை.

உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் இதுதொடா்பாக ஆட்சியா், வனத் துறை அலுவலா் ஆகியோருடன் ஆலோசித்த பிறகே, போதமலைக்கு சாலை அமைப்பதற்கான அனுமதி கிடைத்துள்ளது. நீதிமன்றம் வழங்கிய நிபந்தனைகளை நிறைவேற்றியவுடன் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு சாலைப் பணிகள் தொடங்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநில அளவிலான ஜூடோ போட்டியில் வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

குற்ற வழக்குகளில் தொடா்புடையவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை

பழனியில் கூடுதல் தலைமைச் செயலா் ஆய்வு

லஞ்சம்: வேளாண்மை உதவி இயக்குநா் கைது

புதிய துணை மின் நிலையங்கள் மூலம் சீரான மின் விநியோகம்: அமைச்சா் அர.சக்கரபாணி தகவல்

SCROLL FOR NEXT