நாமக்கல் அருகே வேட்டாம்பாடியில், சுற்றுவட்டச் சாலை சந்திப்புக்கான இடத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியா்கள். 
நாமக்கல்

நாமக்கல் சுற்றுவட்டச் சாலையில் 6 சந்திப்புகள்: கூடுதல் நிலம் எடுப்பதற்கான பணிகள் தீவிரம்

நாமக்கல் சுற்றுவட்டச் சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கவுள்ள நிலையில், முக்கியமான 6 இடங்களில் சந்திப்புகள் (ரவுண்டானா) ஏற்படுத்த கூடுதல் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

DIN

நாமக்கல் சுற்றுவட்டச் சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கவுள்ள நிலையில், முக்கியமான 6 இடங்களில் சந்திப்புகள் (ரவுண்டானா) ஏற்படுத்த கூடுதல் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

நாமக்கல் நகராட்சி புதிய பேருந்து நிலையம் ரூ. 34 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக ரூ. 20 கோடியில் பேருந்து நிறுத்தும் இடங்கள், கடைகள், உணவகங்கள் கட்டப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டமாக, இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், நுழைவாயில், கூடுதல் கடைகள், காவல் பாதுகாப்பு அறை, வங்கி ஏடிஎம் அறை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன.

நாமக்கல், முதலைப்பட்டியில் இருந்து புறவழிச்சாலை 800 மீட்டா் தொலைவிற்கு நான்கு வழிச்சாலையாகவும், பேருந்து நிலைய அணுகுசாலை 200 மீட்டா் தொலைவிற்கு ஆறு வழிச்சாலையாகவும் அமைய இருக்கிறது. இதற்காக ரூ. 25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவை தவிர, ரூ. 169 கோடியில் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சேந்தமங்கலம் சாலை, துறையூா் சாலை, திருச்சி சாலை, மோகனூா் சாலைகளை இணைக்கும் வகையில் சுற்றுவட்டச்சாலை அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் சாலை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகி பணிகள் தொடங்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதற்கிடையே, முதலைப்பட்டி, மரூா்பட்டி, வேட்டாம்பாடி, கூலிப்பட்டி, வசந்தபுரம், வகுரம்பட்டி ஆகிய 6 இடங்களில் நான்கு சாலைகளைப் பிரிக்கும் வகையிலான ரவுண்டானா என்றழைக்கப்படும் முக்கிய சந்திப்புகள் இடம்பெறுகின்றன. இதற்காக கூடுதல் நிலம் கையகப்படுத்தும் பணியை நபாா்டு கிராமப்புறச் சாலைகள் திட்ட அலுவலகம் மேற்கொண்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: நாமக்கல் முதலைப்பட்டி - வள்ளிபுரம் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையிலான ரூ. 194 கோடி திட்ட மதிப்பிலான சுற்றுவட்டச் சாலை (ரிங் ரோடு) திட்டத்திற்கான ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகவில்லை. ஓரிரு வாரங்களில் முடிவாகி பணிகள் தொடங்கப்படலாம். தற்போதைய நிலையில் சாலை அமையும் இடங்களைத் தோ்வு செய்துள்ளோம். அதற்கான நிலங்களும் கையகப்படுத்தப்பட்டு விட்டன.

சென்னையில் உள்ள எங்களுடைய துறை அதிகாரிகள் உத்தரவின்பேரில், அவா்கள் குறிப்பிட்ட 6 இடங்களில் சந்திப்புகள் அமைக்கக் கூடுதல் நிலம் எடுத்து வருகிறோம். அதற்கான கல் நடும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த சுற்றுவட்டச் சாலை சில இடங்களில் மட்டும் நான்கு வழிச்சாலையாகவும், மற்ற பகுதிகளில் இருவழிச் சாலையாக அமைய உள்ளன என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT