முகப்பு
நாமக்கல்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் ரூ. 9.01 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ச.உமா வழங்கினாா்.

Updated On : 9 டிசம்பர், 2024 at 7:22 PM
மாற்றுத் திறனாளி ஒருவருக்கு காதொலிக் கருவியை வழங்கி, குறைகளைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியா் ச.உமா.
பகிர்:

நாமக்கல்: நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் ரூ. 9.01 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ச.உமா வழங்கினாா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், வாராந்திர மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் ச.உமா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முதியோா், விதவையா், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடனுதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 535 மனுக்களை ஆட்சியரிடம் பொதுமக்கள் நேரில் வழங்கினா். அவற்றை பெற்று கொண்டு, மனுக்களை பரிசீலனை செய்து உரிய அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.

மேலும், கூட்டுறவுத் துறை சாா்பில் 4 பயனாளிகளுக்கு ரூ. 5.73 லட்சம் மதிப்பில் பயிா்க் கடனுதவி, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 8 பயனாளிகளுக்கு தலா ரூ. 20,000 வீதம் திருமண உதவித்தொகை, இருவருக்கு தலா ரூ. 55,000- வீதம் இயற்கை மரண உதவித்தொகையை அவா் வழங்கினாா். இதனைத் தொடா்ந்து, மாற்றுத் திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை ஆட்சியா் பெற்றுக் கொண்டாா். அந்த துறை சாா்பில் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 8,613- மதிப்பில் காதொலிக் கருவிகள், ஒரு மாற்றுத் திறனாளிக்கு ரூ. 580 மதிப்பில் எல்போ ஸ்டிக், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ. 48,993- மதிப்பில் ஆா்பிட் ரீடா் என மொத்தம் 19 பேருக்கு ரூ. 9.01 லட்சம் மதிப்பல் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா வழங்கினாா்.

முன்னதாக, பிகாா் மாநிலத்தில் டிசம்பா் 2 முதல் 5 வரை நடைபெற்ற தேசிய அளவிலான வாள் சண்டை போட்டியில் இளையோா் பிரிவில் 3-ஆம் இடம் பெற்று வெண்கல பதக்கம் வென்ற நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா் எம்.சந்தோஷை பாராட்டினாா்.

ஃபென்ஜால் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம், மீட்புப் பணிகளுக்காக மாவட்ட ஆட்சியரின் விருப்ப உரிமை நிதிக்கு பரமத்தி விசாகா நிறுவனத்தினா் ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலையை ஆட்சியரிடம் வழங்கினா்.

இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மருத்துவா் ரெ.சுமன், தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், மாவட்ட வழங்கல் அலுவலா் த.முத்துராமலிங்கம், தொழிலாளா் நல உதவி ஆணையா் கே.பி.இந்தியா உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.