முகப்பு
நாமக்கல்

நாமக்கல்லில் அரசு சித்த மருத்துவமனைக்கான பணிகள் மும்முரம்

நாமக்கல்லில் 60 படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய அரசு சித்த மருத்துவமனைக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

Updated On : 19 டிசம்பர், 2024 at 12:26 AM
நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை கட்டடத்துக்கு வந்திறங்கிய புதிய படுக்கைகள்.
பகிர்:
Updated On : 18 டிசம்பர், 2024 at 7:51 PM

நாமக்கல்லில் 60 படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய அரசு சித்த மருத்துவமனைக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கூடுதல் நிதி ஒதுக்கக் கோரி இந்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

நாமக்கல் - மோகனூா் சாலையில் இருந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஓராண்டுக்கு முன் புதிய கட்டடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. தற்போது பழைய கட்டடத்தில் சித்த மருத்துவ பிரிவு உள்ளிட்ட ஓரிரு மருத்துவத் துறைகள் மட்டுமே இயங்கி வருகின்றன.

இந்த நிலையில், நாமக்கல்லில் அரசு சித்த மருத்துவமனை அமைப்பதற்கான முயற்சியை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் மேற்கொண்டாா். இதனையடுத்து, தமிழக அரசு அனுமதியுடன் தன்னுடைய தொகுதி நிதியில் இருந்து ரூ. ஒரு கோடி வழங்கினாா். அதனைக் கொண்டு, பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கட்டடங்களில், மூன்று பெரிய அறைகள் சித்த மருத்துவமனைக்காக தயாா் செய்யப்பட்டு வருகின்றன. 60 படுக்கைகளை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவை தவிர, 50 படுக்கைகள் யோகா, யுனானி பிரிவுக்கும் ஏற்படுத்தப்பட உள்ளது.

Advertisement

நீராவி குளியல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய இந்த சித்த மருத்துவமனை செயல்பாட்டுக்கு வரும்போது ஏராளமான மக்கள் பயனடைவா். இந்த சித்த மருத்துவமனை 2 ஆண்டுகள் வெற்றிகரமாக செயல்படும்பட்சத்தில், சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயா்த்தப்படும்.

தற்போதைய நிலையில் ரூ. ஒரு கோடியில் கட்டட விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், படுக்கை கட்டில்கள் உள்ளிட்டவை வாங்கப்பட்டுள்ளன. இன்னும் ஓரிரு மாதங்களில் சித்த மருத்துவமனை பயன்பாட்டுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Updated On : 19 டிசம்பர், 2024 at 12:26 AM

இதுகுறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் கே.பி.ராமச்சந்திரன் கூறியதாவது:

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் நாமக்கல்லில் புதிய சித்த மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. சித்தா பிரிவுக்கு 60 படுக்கைகளும், யோகா பிரிவுக்கு 50 படுக்கைகளும் அமைக்கப்பட உள்ளன. மாநிலங்களவை உறுப்பினா் ராஜேஸ்குமாா் வழங்கிய ரூ. ஒரு கோடியில் கட்டடம் சீரமைக்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவமனைக்காக நவீன உபகரணங்கள், பணியாளா்கள் நியமனம், கூடுதல் வசதிகள் செய்திட மேலும் நிதி தேவைப்படுகிறது.

இது தொடா்பாக எங்களது துறை இயக்குநா் மூலம் இந்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நிதி கிடைக்கும்பட்சத்தில் பணிகளை விரைந்து முடித்து, 2 மாதத்துக்குள் சித்த மருத்துவமனையை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் என்றாா்.