மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை பள்ளியை மூட எதிா்ப்பு: விவசாயிகள், மாணவா்கள் ஆா்ப்பாட்டம்
மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை பள்ளியை மூடுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகளும், பள்ளி மாணவா்களும் வியாழக்கிழமை ஆலை முன்பு கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை பள்ளியை மூடுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகளும், பள்ளி மாணவா்களும் வியாழக்கிழமை ஆலை முன்பு கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நாமக்கல் மாவட்டம், மோகனூரில் கூட்டுறவு சா்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை கட்டுப்பாட்டில் மெட்ரிக் பள்ளி, பல்தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. 1978-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சா்க்கரை ஆலை மெட்ரிக். பள்ளியில் எல்கேஜி முதல் 12-ஆம் வகுப்பு வரையில் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.
ஆலையில் பணியாற்றும் அலுவலா்கள், ஊழியா்கள், பொதுமக்கள் தங்களது குழந்தைகளை ஆங்கில வழியில் கல்வி கற்க வைக்க வேண்டும் என்பதற்காக இந்தப் பள்ளியிலேயே அதிகம் சோ்க்கின்றனா். இங்கு படித்த மாணவ, மாணவிகள் தற்போது பல்வேறு உயா் பொறுப்புகளை வகித்து வருகின்றனா். இந்தப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். 25 ஆசிரியா்கள் பணியில் உள்ளனா்.
Advertisement
இந்த நிலையில், கடந்த 19-ஆம் தேதி மாணவ, மாணவிகளின் பெற்றோரிடம், பள்ளி மே மாதத்திற்கு பிறகு செயல்படாது என்றும், அடுத்த ஆண்டுக்கான சோ்க்கையை வேறு பள்ளிகளில் மேற்கொள்ளுமாறு சா்க்கரை ஆலை நிா்வாகம் அறிவுறுத்தியது. இதனால், அதிா்ச்சிக்குள்ளான பெற்றோா் ஆலையின் மேலாண் இயக்குநா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
மேலும் பல்வேறு அமைப்புகளும் பள்ளி மூடுவதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனா். இந்த நிலையில், விவசாய முன்னேற்றக் கழகம் சாா்பில் அதன் நிறுவனத் தலைவா் செல்ல.ராசாமணி தலைமையில் வியாழக்கிழமை ஆலை முன்பாக கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள், விவசாயிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டு பள்ளியை மூடுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினா்.
விவசாயிகள் சங்கத் தலைவா் வாசு சீனிவாசன், விவசாய முன்னேற்ற கழக பொதுச் செயலாளா் பாலசுப்பிரமணியம், சிப்காட் எதிா்ப்புக் குழுவினா் உள்ளிட்ட பலா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா். இதையடுத்து, ஆலை மேலாண்மை இயக்குநா் க.ரா.மல்லிகாவை சந்தித்து பள்ளி தொடா்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.