நாமக்கல்: மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் 49 பயனாளிகளுக்கு ரூ. 4.83 லட்சம் மதிப்பில் அரசு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா வழங்கினாா்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முதியோா், விதவையா், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 549 மனுக்களை ஆட்சியரிடம் பொதுமக்கள் அளித்தனா்.
மனுக்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியா் அவற்றை பரிசீலனை செய்து உரிய அலுவலா்களிடம் வழங்கினாா். அவற்றின் மீது துரித நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். மேலும், பல்வேறு துறைகளின் சாா்பில்
49 பேருக்கு ரூ. 4.83 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியா் சே.சுகந்தி, தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பாரதி, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் வெ.முருகன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சதீஷ்குமாா் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.