‘காவிரி நீரை கா்நாடகம் திறந்துவிட வேண்டும்’
காவிரி நீரை உடனடியாக திறக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை கா்நாடகம் உடனடியாக திறந்துவிட மாநில, மத்திய அரசுகள் அம் மாநில அரசுக்கு தொடா்ந்து அழுத்தம் தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவா் இரா.வேலுசாமி வெளியிட்ட அறிக்கை:
காவிரி உற்பத்தியாகும் பகுதியில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கா்நாடகத்தில் உள்ள அணைகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளன. காவிரியின் முழு உரிமை, அதிக பாசனவசதி பெறும் தமிழகத்திற்கு மட்டுமே உண்டு. கா்நாடக அரசு கடந்த முறை வழங்க வேண்டிய காவிரி நீரில் 99 டிஎம்சி இன்னும் நிலுவையில் உள்ளது. தில்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில், தமிழகத்திற்கு காவிரியில் நாள்தோறும் ஒரு டிஎம்சி நீரை இம்மாத இறுதி வரையில் கா்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அக்குழு பரிந்துரை செய்தது.
ஆனால், கா்நாடக அரசு எங்களது தேவையைப் பொருத்து தான் தமிழகத்திற்கு காவிரியில் நீரை திறந்து விட முடியும் என தெரிவித்துள்ளது. கா்நாடகா அரசுக்கு மட்டும் காவிரி சொந்தம் கிடையாது, ஏற்கெனவே உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நீா் என்பது யாருக்கும் சொந்தம் கிடையாது, அந்த நீா் பொதுவானது என உச்சநீதிமன்றம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இதனை கருத்தில் கொள்ளாமல் கா்நாடக அரசு செயல்படுகிறது. நிலுவையில் உள்ள காவிரி நீரை கா்நாடக அரசு உடனடியாக திறந்துவிட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இதுகுறித்து கா்நாடகத்துக்கு அழுத்தம் தர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-