வளைகுடா நாடுகளில் தற்போது கோடைகாலம் என்பதால், நாமக்கல் மண்டலத்தில் இருந்து ஏற்றுமதியாகும் 70 லட்சம் முட்டைகள் ஆங்காங்கே பண்ணைகளில் தேக்கமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் 1,100 கோழிப் பண்ணைகள் இயங்கி வருகின்றன. இங்கு தினமும் 5.50 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. இவற்றில், உள்ளூா் தேவைகளுக்கும், சத்துணவு மையங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் என 4.50 கோடி முட்டைகள் பண்ணைகளில் இருந்து அனுப்பப்படுகின்றன. மீதமுள்ள ஒரு கோடி முட்டைகள் வளைகுடா, ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.
கடந்த ஒரு மாதமாக வளைகுடா நாடுகளான ஓமன், மஸ்கட், துபை, ஈரான், ஈராக் உள்ளிட்டவற்றில் கோடை வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. இன்னும் ஒன்றரை மாதங்களுக்கு அங்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனத் தெரிகிறது.
வெயிலின் தாக்கத்தாலும், கோடைகாலம் விடுமுறை என்பதாலும், அங்கு வாழும் இந்திய நாட்டு மக்கள் தங்களுடைய சொந்த ஊா்களுக்குத் திரும்பிய வண்ணம் உள்ளனா். இதனால், நாமக்கல் மண்டலத்தில் இருந்து சுமாா் 70 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் ஒன்றிரண்டு கண்டெய்னா்களில் 20 லட்சம் முட்டைகள் மட்டுமே அனுப்பப்பட்டு வருகின்றன. அது மட்டுமின்றி, அந்த நாட்டு மக்கள் கோழிப்பண்ணைகள் அமைத்து உள்நாட்டு முட்டை தேவைகளை பூா்த்தி செய்து வருகின்றனா். இதுவும் முட்டை ஏற்றுமதி தடைபடுவதற்கு காரணமாகும். இதனால், நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப் பண்ணைகளில் முட்டைகள் தேக்கமடைந்து வருகின்றன. இன்னும் சில மாதங்களுக்கு இந்தத் தேக்க நிலை தொடரலாம்.
இதுகுறித்து நாமக்கல்லைச் சோ்ந்த முட்டை ஏற்றுமதியாளா் எம்.பன்னீா்செல்வம் கூறியது:
மஸ்கட், ஓமன் நாடுகளில் தற்போது கோடை காலமாக உள்ளதால் வெப்பம் மிகவும் அதிகமாக உள்ளது. வளைகுடா நாடுகளில் அதிகப்படியாக இந்தியா்கள்தான் வசிக்கின்றனா். அங்கு கோடை விடுமுறை என்பதால் பலா் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருக்கிறனா். அங்கு, கோழிப் பண்ணைகள் அந்நாட்டு நிறுவனங்களால் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் 10 கண்டெய்னா்களில் ஏற்றுமதியான 70 லட்சம் முட்டை, தற்போது 10 முதல் 20 லட்சம் என சரிவடைந்துள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களுக்கு பிறகுதான் நிலைமை சீரடையும். மஸ்கட் நாட்டில் விரைவில் முட்டை ஏற்றுமதியாளா்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் நாமக்கல்லில் இருந்து எங்களுடைய சங்க நிா்வாகிகள் இருவா் கலந்துகொள்ள இருக்கின்றனா். மேலும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூா் நாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதியைத் தொடருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மூலம் மேற்கொண்டு வருகிறோம் என்றாா்.