முகப்பு
நாமக்கல்

நாமக்கல்லில் பழங்கால நாணயங்கள் கண்காட்சி

நாமக்கல்லில் பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Updated On : 19 ஜூலை, 2024 at 6:15 PM
என்கே-19-நாணயம்
பகிர்:

நாமக்கல், ஜூலை 19:

நாமக்கல்லில் பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள சுப்புலட்சுமி திருமண மண்டபத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை இந்த கண்காட்சி நடைபெறுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள், 250-க்கும் மேலான நாடுகளின் ரூபாய் நோட்டுகள், பல வகையான பழைமை சாா்ந்த பொருள்கள், சாதனங்கள், சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் பயன்படுத்தப்பட்ட ரூபாய் நோட்டுகள், தற்போது புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள், புதிய வகை நாணயங்கள் அனைத்தும் மக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

அதேபோல குத்தீட்டி, குறுவால் உள்ளிட்ட ஆயுதக் கலைப் பொருள்களும், பழங்கால கேமரா, வானொலி, பைனாகுலா் ஆகியவைகளும் இடம் பெற்றுள்ளன. பலரும் அறியாத இந்திய அரசின் 125, 75 ரூபாய் சிறப்பு வெள்ளி நாணயங்களும் இக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

இதில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ள நாணய சேகரிப்பாளா்கள் தங்களது நாணயங்களைக் காட்சிப்படுத்தி உள்ளனா். புதிய வரவாக ரூ. 525 நாணயம் அனைவரையும் கவரும் வகையில் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாா்வையிட்டு தாங்கள் விரும்பும் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம்.

இதுகுறித்து பழங்கால நாணயங்கள் கண்காட்சி ஒருங்கிணைப்பாளா்கள் சேலத்தைச் சோ்ந்த ரியாஸ் கூறுகையில், இதுவரை பல்வேறு மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட கண்காட்சிகளை நடத்தி உள்ளோம். சேலம், கோவையில் தான் அதிகம் நடத்தப்பட்டுள்ளன. நாமக்கல்லில் தற்போது இரண்டாவது முறையாக 15-க்கும் மேற்பட்ட அரங்குகளில் இந்த நாணயக் கண்காட்சியை நடத்துகிறோம். மூன்று நாள்கள் நடைபெறும் இக் கண்காட்சியினை மக்கள் பாா்வையிடுவதுடன் பல்வேறு வகையில் விழிப்புணா்வு பெற முடியும் என்றாா்.

என்கே-19-நாணயம்

நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை தொடங்கிய பழங்கால நாணயக் கண்காட்சியைப் பாா்வையிடும் பொதுமக்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →