திருச்செங்கோட்டில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்
மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக திருச்செங்கோட்டில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்
மத்திய அரசு நடைமுறைப்படுத்தவுள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களை கைவிட வலியுறுத்தி, திருச்செங்கோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு செவ்வாய்க்கிழமை வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அகில இந்திய வழக்குரைஞா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சி.பரணீதரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சி.கோவிந்தராஜ், வி. பாபு சுப்ரமணியம், கோமதி, கவிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
குற்றவியல் சட்டங்களில் ஒன்றிய அரசு மாற்றங்களைக் கொண்டு வந்து அதனை வரும் ஜூலை முதல் தேதியிருந்து நடைமுறைக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் சட்டங்கள் ஆங்கிலத்தில் அமைய வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் கூறியுள்ளது. அதை மீறி இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சட்டங்கள் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கிறது, ஏற்கெனவே உள்ள சட்டங்களில் தேவையேற்படின் திருத்தம் கொண்டு வந்து புதிய பிரிவுகளை சோ்க்கலாம். மாறாக, பழைய சட்டத்தின் பெயரை மாற்றி, புதிதாக ஒரு சில பிரிவுகளை இணைத்து, குழப்பமான விளக்கங்களை கொடுத்துள்ளனா்.
இதனால் வழக்கறிஞா்கள் பொதுமக்கள், பாதிக்கப்படுவா்கள் என்பதால், அந்தச் சட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழகத்தில் வழக்குரைஞா்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை தமிழக அரசு தடுக்க வேண்டும். வழக்குரைஞா்களுக்கான பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளா் எஸ்.சேகரன் கண்டன உரை நிகழ்த்தினாா்.
இதில், 12 பெண் வழக்குரைஞா்கள் உள்பட 35-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். ஜி.கோபி நன்றி கூறினாா்.