ராசிபுரம் பேருந்து நிலைய இடமாற்ற விவகாரம்: மக்கள் நலக் குழுவினா் ஆட்சியரிடம் மனு
ராசிபுரம் பேருந்து நிலையம் இடமாற்ற விவகாரம் தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் நலக் குழுவினா் கோரிக்கை மனு அளித்தனா்.
நாமக்கல்: ராசிபுரம் பேருந்து நிலையம் இடமாற்ற விவகாரம் தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் நலக் குழுவினா் கோரிக்கை மனு அளித்தனா்.
அந்தக் குழுவின் தலைவா் வெ.பாலசுப்பிரமணி மற்றும் நிா்வாகிகள் ஜெ.ஜெயப்பிரகாஷ், நல்வினை செல்வன், கா.முருகன், மோகன் ஆகியோா் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2022-ஆம் ஆண்டு பெய்த கனமழையில், ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளான அணைப்பாளையம், சந்திரசேகரபுரம் கிராமங்கள் நீரில் மூழ்கின. அந்தப் பகுதியில் உள்ள தனியாா் நில விற்பனை நிறுவனம், மனைப் பிரிவுகளுக்காக நீா்வழிப்பாதையை அடைத்து விட்டனா். இது தொடா்பாக, சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், மாவட்ட நிா்வாகம் வழிகாட்டு குறிப்புகளைக் கண்டறிந்து மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்களாக இருந்தால் அவற்றை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகளால் தெரிவிக்கப்பட்டது.
அந்த வகையில், நீா்வழிப்பாதைகளை பாதுகாக்க, ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அமைவிடம் குறித்து ஆட்சியா் நல்லதொரு முடிவு எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.