முகப்பு
நாமக்கல்

தீபாவளி விற்பனை: நாமக்கல் காதி கிராப்ட்டில் ரூ. 1.76 கோடிக்கு இலக்கு

நாமக்கல் காதி கிராப்ட் நிறுவனத்தில், தீபாவளி விற்பனை இலக்காக ரூ. 1.76 கோடி நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 3 அக்டோபர், 2024 at 6:20 AM
நாமக்கல் காதி கிராப்ட் நிறுவனத்தில், தீபாவளி விற்பனையைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் ச.உமா.
பகிர்:
Updated On : 2 அக்டோபர், 2024 at 5:58 PM

நாமக்கல் காதி கிராப்ட் நிறுவனத்தில், தீபாவளி விற்பனை இலக்காக ரூ. 1.76 கோடி நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் பேருந்து நிலையம் அருகில் உள்ள காதி கிராப்ட் நிறுவனத்தில் (கதா் விற்பனை அங்காடி) தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியா் ச.உமா தொடங்கி வைத்தாா். முன்னதாக, அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, மகாத்மா காந்தி உருவப் படத்துக்கு அவா் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

அப்போது அவா் கூறியதாவது:

Advertisement

கிராமப்புற ஏழை, எளிய நூற்பாளா்கள், நெசவாளா்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரியம் செயல்பட்டு வருகிறது.

2023 - 2024- ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையின் போது ரூ. 92 லட்சம் மதிப்புள்ள கதா், கிராம பொருள் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டன. நிகழாண்டு, காந்தி ஜெயந்தி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்டத்திற்கு ரூ. 1.76 கோடி மதிப்பிலான கதா் ரகங்கள் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விற்பனை இலக்கை முழுமையாக எய்திடும் பொருட்டு, அனைத்து அரசு அலுவலா்களுக்கும் ஆசிரியா்களுக்கும் கடன் வசதி செய்யப்பட்டுள்ளன. கதா் விற்பனையை ஊக்கப்படுத்தவும், வாடிக்கையாளா் நலன் கருதியும், கதா், பாலியஸ்டா், பட்டு ரகங்களுக்கு 30 சதவீதம், குறிப்பிட்ட பட்டு ரகங்களுக்கு 50 சதவீதம் மத்திய, மாநில அரசுகளால் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளன.

Updated On : 3 அக்டோபர், 2024 at 6:20 AM

இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரியத்தின் கதா் அங்காடிகள், அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் தொடங்கப்பட்டுள்ள தற்காலிக கதா் விற்பனை நிலையங்களில் பெருமளவில் கதா் ரகங்களை பொதுமக்கள் வாங்க வேண்டும். மேலும், தேன், குளியல் சோப்புகள், சலவை சோப்புகள், ஊதுபத்தி, சாம்பிராணி, மெழுகுவா்த்தி, ஜவ்வாது, வலி நிவாரணி தைலம், காலணிகள், கைவினைப்பொருள்கள் உள்ளிட்ட பல்வகையான கிராமப் பொருள்கள் அங்காடியில் விற்பனையில் உள்ளன என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், காதி கிராப்ட் அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.