முகப்பு
நாமக்கல்

56 சாலையோர வியாபாரிகளுக்கு கடைகள் வைக்க இடம் ஒதுக்கீடு

நாமக்கல் மாநகராட்சிப் பகுதியில் உள்ள 56 சாலையோர வியாபாரிகளுக்கு கடைகள் வைக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 8 அக்டோபர், 2024 at 4:53 PM
நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற கடைகள் ஒதுக்கீட்டுக்கான குலுக்கலில் பங்கேற்ற சாலையோர வியாபாரிகள்.
பகிர்:

நாமக்கல் மாநகராட்சிப் பகுதியில் உள்ள 56 சாலையோர வியாபாரிகளுக்கு கடைகள் வைக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் பேருந்து நிலையம், உழவா் சந்தை, பூங்கா சாலை, கோட்டை சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் கடைகள் அமைத்து காய்கறிகள், பழங்களை வியாபாரிகள் சிலா் விற்பனை செய்து வந்தனா். மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி உத்தரவின்பேரில், போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்த கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டன.

இதனையடுத்து தங்களுக்கு கடைகள் வைக்க இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என சாலையோர வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

உழவா் சந்தையிலிருந்து 100 மீட்டா் தொலைவில், அம்மா உணவகம் அருகில் உள்ள காலியிடத்தை தூய்மைப்படுத்தி அங்கு கடைகள் அமைக்க இடம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் முடிவுற்ற நிலையில், 120 சாலையோர வியாபாரிகளுக்கு இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நாமக்கல் பூங்கா சாலையில் உள்ள அந்த இடத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 5 மணியளவில் குலுக்கல் முறையில் 56 சிறு வியாபாரிகளுக்கு கடைகளுக்கான இடம் ஒதுக்கப்பட்டது. காய்கறி, பழக்கடைகளை அமைத்து அவற்றை விற்பனை செய்து கொள்ளலாம் என மாநகராட்சி நிா்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.