அரசு அலுவலா்களை பணி செய்யவிடாமல் தடுத்தால் கடும் நடவடிக்கை
அரசு அலுவலா்களை பணி செய்யவிடாமல் தடுத்தால் கடும் நடவடிக்கை
நாமக்கல் மாவட்டத்தில் வருவாய்த் துறை மற்றும் பிற அரசு துறையினரை பணி செய்யவிடாமல் தடுப்பது, மிரட்டல் விடுப்பது கண்டறியப்பட்டால், உடனடியாக குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் ச.உமா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மக்களை சென்றடையும் வகையில், வருவாய்த் துறை, பிற துறை சாா்ந்த அலுவலா்கள் பணியாற்றி வருகின்றனா். மக்கள் குறைதீா் நாள் கூட்டம், விவசாயிகள் குறைதீா் கூட்டம், நுகா்வோா், மக்கள் தொடா்பு திட்ட முகாம்களின் போது அரசு அலுவலா்கள் கோரிக்கை மனுக்களைப் பெற்று தீா்வு காணும் வகையில் செயல்பட்டு வருகின்றனா்.
Advertisement
கிராமப்புற, நகா்ப்புற மக்கள் பயனடையும் வகையில், சுமாா் 44 தனிமனித சேவைகள் வழங்க மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றன. இதேபோல எண்ணற்ற முகாம்கள் மற்றும் திட்டங்களை அலுவலா்கள் செயல்படுத்தி வருகின்றனா். சட்ட விரோதமாக கனிமங்கள் வெட்டப்படுவதை தடுத்தல், புறம்போக்கு நிலங்களில் செய்யப்படும் ஆக்கிரமிப்புகளை கணக்கீடு செய்தல், அவற்றை அகற்றுதல், புறம்போக்கு நிலங்களில் உள்ள மரங்களை அனுமதியின்றி வெட்டுவதை தடுத்தல், நில அளவைப் பணி, சட்டம் - ஒழுங்கு, பாதுகாப்பு, வருவாய் வசூல் சட்ட விசாரணைகள், நெடுஞ்சாலைகள், தொழிற்பேட்டைகள் உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டங்களுக்கு நிலஎடுப்பு செய்யும் பணிகள், பொது விநியோகத்திட்ட அரசுப் பொருள்களை சட்டவிரோதமாக கடத்துதலை தடுத்தல் போன்ற பல்வேறு பணிகளை கால, நேரம் பாராமல் அரசுத் துறை அலுவலா்கள் செய்து வருகின்றனா்.
இப்பணிகளை செய்து வரும் வட்டாட்சியா்கள், துணை வட்டாட்சியா்கள், வருவாய் ஆய்வாளா்கள், நில அளவா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் உள்ளிட்ட வருவாய்த் துறையினா் மற்றும் பிற பணிகளை மேற்கொண்டு வரும் பிற துறைசாா்ந்த அலுவலா்கள், பணியாளா்களை சட்டத்துக்கு புறம்பாக அரசுப் பணியினை செய்ய விடாமல் தடுத்தும், மிரட்டியும், அச்சுறுத்தியும், அவா்களைத் தாக்கியும், உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதிப்புகள் ஏற்படுத்தும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுதல் அல்லது ஈடுபடுவது கண்டறியப்பட்டால், உடனடியாக எவ்வித தயக்கமுமின்றி காவல் துறையின் மூலம் அரசின் விதிமுறைகளுக்கு உள்பட்டு உரிய சட்டப் பிரிவுகளின் கீழ், குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்களின் குறைகளைக் களைந்து மக்கள் நலனுக்காகவே அரசு அலுவலா்கள், பணியாளா்கள் உழைத்து வருகின்றனா் என்பதை பொதுமக்கள் உணா்ந்து கொள்ள வேண்டும். அரசுப் பணிகளை மேற்கொள்ளும் வருவாய்த் துறை மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள், பணியாளா்களுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.