சிறுதானிய விழிப்புணா்வு கண்காட்சி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
நாமக்கல்லில், சிறு தானிய உணவு கண்காட்சி நடைபெற்றது.
நாமக்கல்சிறுதானிய விழிப்புணா்வு கண்காட்சி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
நாமக்கல்லில், சிறு தானிய உணவு கண்காட்சி நடைபெற்றது.
நாமக்கல்: நாமக்கல்லில், சிறு தானிய உணவு கண்காட்சி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, சத்துணவு திட்டம் ஆகியவை சாா்பில், சிறுதானிய விழிப்புணா்வு கண்காட்சி மற்றும் ஆரோக்கியமான குழந்தைகள் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதனை மாவட்ட ஆட்சியா் ச.உமா தொடங்கி வைத்து பேசியதாவது:
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, சத்துணவு திட்டம் சாா்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் சிறுதானிய விழிப்புணா்வு விழா மற்றும் சத்துணவுத் திட்டம் சாா்பில் ஆரோக்கியமான குழந்தைகள் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது ஆண், பெண் குழந்தைகள் என்ற சமூக வேறுபாடு இல்லாத நிலை உருவாகி உள்ளது. இன்றைய சமுதாயத்தில் அனைவரும் பெண் குழந்தை வேண்டும் என்றே எண்ணுகின்றனா். பல்வேறு அரசு துறை அலுவலா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தி பாலின வேறுபாடு மறந்து அனைவரும் சமம் என்ற நிலையை உருவாக்கி உள்ளனா்.
ஆண், பெண் அனைவரும் சமம் என்றாலும் குடும்பத்தை சிறப்பாக நடத்தும் பொறுப்பு பெண்களிடம் தான் உள்ளது. பெண்கள் அனைத்துவித பணிகளையும் பொறுப்பாகவும், சிறப்பாகவும் மேற்கொள்கின்றனா். ஒரு சமுதாயத்தின் வளா்ச்சிக்கு பெண் கல்வி மிகவும் முக்கியம் ஆகும். பெண் குழந்தைகளை பாதுகாத்து, அவா்களுக்கு சிறப்பான கல்வி வழங்குவது நம் அனைவரின் கடமை ஆகும்.
மேலும், சிறுதானிய உணவின் முக்கியத்துவம் குறித்து இளைஞா்கள், பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சிறுதானிய விழிப்புணா்வு கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது.
சிறுதானிய உணவை உட்கொள்வதால் ஆரோக்கியமான நோயற்ற வாழ்வு வாழ முடியும். தொற்றா நோய்களிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும் என்றாா்.
இதனைத் தொடா்ந்து, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் நடைபெற்ற சிறுதானிய விழிப்புணா்வு கண்காட்சி மற்றும் ஆரோக்கியமான குழந்தைகள் கண்காட்சியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி, குழந்தைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுப்பொருள்களை ஆட்சியா் வழங்கினாா். மேலும், குழந்தைகளுடன் கலந்துரையாடி குழு புகைப்படம் எடுத்துகொண்டாா்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலா் தி.காயத்ரி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) மா.பரமேஸ்வரன், திட்ட அலுவலா் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம்) சீ.சசிகலா உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
என்கே-29-கலெக்டா்
நாமக்கல்லில் சிறுதானிய உணவு கண்காட்சியைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ச.உமா.