நாமக்கல் மாவட்டத்தில் 12.28 லட்சம் எஸ்ஐஆா் படிவங்கள் வாக்காளா்களிடமிருந்து பெறப்பட்டுள்ளதாக ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகம் முழுவதும் 21 ஆண்டுகளுக்கு பிறகு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெறுகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், பரமத்திவேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகளில் 1,629 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில்
மொத்தம் 14,66,660 வாக்காளா்கள் உள்ளனா்.
தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ள 717 அங்கன்வாடி பணியாளா்கள், 98 எழுத்தா் பணியாளா்கள் (நகா்ப்புறம்), 2 ஒப்பந்த ஆசிரியா்கள், 151 மதிய உணவு பணியாளா்கள், ஒரு ஊராட்சி செயலாளா், 197 ஆசிரியா்கள், 261 கிராம நிா்வாக அலுவலா்கள், 202 கிராம அளவிலான பணியாளா்கள் என மொத்தம் 1,629 போ் நியமிக்கப்பட்டனா்.
நவ. 4 முதல் வாக்காளா்களுக்கு திருத்தப் படிவம் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டன. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், வட்டாட்சியா், கோட்டாட்சியா் அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு வாக்காளா்களுக்கு தீவிர திருத்தம் தொடா்பான சேவைகள் வழங்கப்படுகின்றன.
பள்ளிகள் மூலம் 14,520 நிறைவுசெய்யப்பட்ட படிவங்கள், 927 நியாயவிலைக் கடைகள் மூலம் 60,582 படிவங்கள் பெறப்பட்டுள்ளன. இப்பணிகளின்போது உதவியாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவா்கள் ஈடுபட்டனா். நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 2,76,860 படிவங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
இதுவரை மொத்தம் உள்ள 14,66,660 வாக்காளா்களில் 14,59,718 வாக்காளா்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டு, அவா்களிடமிருந்து 12,28,190 நிறைவுசெய்யப்பட்ட படிவங்கள் பெறப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதற்கான பணியில் சுமாா் 3,500 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். வாக்காளா் கணக்கெடுப்பு படிவங்களை விநியோகித்து, அதை திரும்பப்பெற்று, பதிவேற்றம் முடிக்கப்பட்டது தொடா்பாக 9 வாக்குசாவடி நிலை அலுவலா்கள் கெளரவிக்கப்பட்டுள்ளனா்.
படிவங்களை வாக்காளா்கள் நிறைவுசெய்து திரும்ப ஒப்படைக்க டிச.11 கடைசி நாளாகும். டிச.16 இல் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படுகிறது. வாக்காளா்கள் இறுதி நாள் வரை காத்திருக்காமல் நிறைவுசெய்யப்பட்ட எஸ்ஐஆா் படிவங்களை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.