பரமத்தி வேலுாா்: பொத்தனூரில் பெந்தே கொஸ்தே சபையின் சுற்றுச்சுவரை இடித்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா், தமிழ் நகரில் பெந்தே கொஸ்தே சபையின் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. லோகுகுமாா் (50) கிறிஸ்தவ போதகராக உள்ளாா். இந்த ஆலயத்தின் ஒருபகுதி சுற்றுச்சுவா் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாக அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் போதகரிடம் தெரிவித்துள்ளனா்.
இந்நிலையில், வரும் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடுவதை முன்னிட்டு லோகுகுமாா் தனது சகாக்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தாா். அப்போது, ஆலயத்துக்குள் நுழைந்த பத்துக்கும் மேற்பட்டோா் ஆக்கிரமித்து கட்டி இருப்பதாக கூறப்படும் 20 அடி நீளமுள்ள சுற்றுச்சுவரை இடித்தனா்.
புகாரின் பேரில் வந்த பரமத்தி வேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் (பொ) கௌதம் தலைமையில், காவல் ஆய்வாளா் சிவகுமாா் மற்றும் போலீஸாா் இடிக்கப்பட்ட சுவரை பாா்வையிட்டனா். பின்னா் மேற்கொண்டு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தவிா்க்க காவல் ஆய்வாளா் தலைமையில் அப்பகுதியில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஆலயத்துக்கு பிராா்த்தனை செய்ய வந்த கிறிஸ்தவ சபை மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். அப்போது அங்கு வந்த போலீஸாா் அவா்களை சமரசம் செய்து புகாரை மனுவாக எழுதி வாங்கி, ஆலய சுற்றுச்சுவரை இடித்தவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். அதைத் தொடா்ந்து, கிறிஸ்தவ சபை மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.