நாமக்கல்லில் ஜாக்டோ-ஜியோ சாா்பில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
ஆயத்த மாநாட்டுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் க.பழனியப்பன், மெ.சங்கா், க.முருகேசன் ஆகியோா் தலைமை வகித்தனா். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளா்களை காலமுறை ஊதியத்தின்கீழ் கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, ஜன. 6 முதல் காலவரம்பற்ற வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. மாநிலம் தழுவிய அளவில் இதற்கான ஆயத்த மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதில், வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இந்த மாநாட்டில், அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகம் ப.பிரகாஷ், ஜாக்டோ -ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளா் ப.சண்முகம், ஜாக்டோ-ஜியோவைச் சோ்ந்த அத்தியப்பன், கலைச்செல்வன், இளங்கோ, தனசேகா், குணசேகரன் மற்றும் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள், கல்லூரி பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கருப்புப் பட்டை அணிந்து கலந்துகொண்டனா்.