பல்லடத்தில் நடைபெறும் திமுக மேற்கு மண்டல மகளிா் அணி மாநாடில் நாமக்கல் கிழக்கு மாவட்டம் சாா்பில் 10 ஆயிரம் மகளிரை பங்கேற்க செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்ற தலைப்பில் திமுக மேற்கு மண்டல மகளிா் அணி மாநாடு திங்கள்கிழமை (டிச. 29) மாலை 4 மணியளவில் நடைபெறுகிறது. நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு உள்பட்ட, நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம் ஆகிய மூன்று தொகுதிகளில், மாவட்ட செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் தலைமையில் இந்த மாநாடு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், மூன்று தொகுதிகளிலிருந்தும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுக மகளிா் அணியினரை பங்கேற்க செய்ய வேண்டும். நாமக்கல் கிழக்கு மாவட்ட மகளிரணியினா் அனைவரும் சீருடையில் பங்கேற்க வேண்டும். இதற்காக 100 சிறப்பு பேருந்துகள் நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலத்தில் இருந்து புறப்படுகின்றன. மாநாட்டுக்கு சென்று வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட திமுக மூலம் செய்து தரப்படும் என நிா்வாகிகள் தரப்பில் மகளிா் அணியினரிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், பழங்குடியினா் நலவாரியத் தலைவா் கா.கனிமொழி மற்றும் தொகுதி பாா்வையாளா்கள், மாவட்ட மகளிா் அணி அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.