முகப்பு
நாமக்கல்

விவசாயிகளுக்கு தனிக்குறியீடு எண் வழங்கும் முகாம்

விவசாயிகளுக்கு தனிக்குறியீடு எண் வழங்குவதற்கான தரவுகள் பதிவு செய்யும் பணி கடந்த வெள்ளிக்கிழமை முதல் அனைத்து கிராமங்களிலும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Updated On : 10 பிப்ரவரி, 2025 at 8:25 PM
பகிர்:

பரமத்தி வேலூா்: நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தனிக்குறியீடு எண் வழங்குவதற்கான தரவுகள் பதிவு செய்யும் பணி கடந்த வெள்ளிக்கிழமை முதல் அனைத்து கிராமங்களிலும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என வேளாண் இணை இயக்குநா் பெ.கலைச்செல்வி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ், அனைத்து கிராமங்களிலும் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம், சமுதாயக் கூடங்களில் ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவு அடுக்கு உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில், நில விவரங்களுடன், விவசாயிகளின் விவரம் மற்றும் நில உடமை வாரியான விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு விவசாயிகளுக்கும் தனிக்குறியீடு எண் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகே, அவா்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டு அடையாள எண் வழங்கப்படும். இதன் மூலம் மத்திய, மாநில அரசுகளின் அனைத்து திட்டப் பலன்களும் விவசாயிகளின் தரவுத்தளம் அடிப்படையிலேயே வழங்கப்படும்.

இதனால், அனைத்து துறை பயன்களையும், மானியங்களையும் ஒற்றைச்சாளர முறையில் பெறுவதுடன், வலைதளத்தில் பதிவு செய்தால் முன்னுரிமை அடிப்படையில் அரசின் பயன்களை பெற்றுக் கொள்ளலாம். ஆதாா் எண் அடிப்படையில் விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடி பணப் பரிமாற்றம் செய்யப்படும்.

எனவே, நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து விவசாயிகளும் முகாம் நடைபெறும் நாள்களில் நில ஆவணங்கள், ஆதாா் எண், கைப்பேசி எண்ணை கொடுத்து பதிவு செய்துகொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →