நாமக்கல்லில் தண்ணீர்த் தொட்டியில் மூழ்கி தந்தை, மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் கொசவம்பட்டி யோகா நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அஞ்சல் ஊழியர் மயில் கண்ணன் (வயது 68). இவருடைய மனைவி கஸ்தூரி (54), இவர்களுக்கு பிரதீப் கண்ணன் (37) என்ற மகனும், ப்ரீத்தி கண்ணன் (34) என்ற மகளும் இருந்தனர். இதில், கஸ்தூரி 10 ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்து அவரது தாய் வீட்டுக்குச் சென்று விட்டார்.
அமெரிக்காவுக்கு வேலைக்காகச் சென்ற பிரதீப் கண்ணன், அங்குள்ள பெண் ஒருவரை திருமணம் செய்து, அங்கேயே குடியேறிவிட்டார்.
இந்த நிலையில், மயில் கண்ணன் மற்றும் அவரது மகள் ப்ரீத்தி ஆகிய இருவர் மட்டும் தனியாக வசித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் சர்க்கரை நோய் பாதிப்பு இருந்துள்ளது. மேலும், ப்ரீத்திக்கு திருமணம் தாமதமாகி வந்தது அவரது தந்தை மயில் கண்ணனை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இருவரும் திங்கள்கிழமை நள்ளிரவு அவர்களது வீட்டில் உள்ள தண்ணீர்த் தொட்டியில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டனர்.
இதையடுத்து, இன்று (நவ. 4) காலை நெடுநேரமாகியும் வீட்டில் இருந்து இருவரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்களைத் தேடியபோது தண்ணீர்த் தொட்டியில் இருவரின் சடலங்களும் கண்டறியப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, தகவலறிந்து அங்கு விரைந்த நாமக்கல் காவல் நிலைய அதிகாரிகள் இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூராய்விற்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வீட்டில் போலீஸார் நடத்திய சோதனையில் அவர்கள் எழுதிய கடிதம் ஒன்று கண்டறியப்பட்டது.
அதில், தங்களுடைய தற்கொலைக்கு நோய் பாதிப்பு மட்டுமே காரணம் எனவும், கடன் தொல்லையோ, வேறு எந்த பிரச்னையும் காரணம் இல்லை எனவும் கூறப்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக நாமக்கல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை: மூவரை அடையாளம் கண்டது எப்படி? காவல் ஆணையர் தகவல்
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.