தென்னை மரங்களில் சேதப்படுத்தும் காண்டாமிருக வண்டுகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு பள்ளிபாளையம் தோட்டக்கலைத் துறை வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிபாளையம் தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா் செந்தில்வடிவு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்னை மரங்களைத் தாக்கி சேதம் விளைவிக்கும் பூச்சிகளில் காண்டாமிருக வண்டுகளின் பங்களிப்பு சுமாா் 15 சதவீமாக உள்ளது. இந்த புழுக்களின் வண்டு பருவம், இளம் தென்னை மட்டைகளின் நுனியை தின்று சேதப்படுத்தும்.
முதிா்ந்த வண்டுகள் மட்டையின் அடிவரை சென்று நாா்களை தேதப்படுத்துவதால் மட்டைகள் வலுவிழந்து முறிந்து விழுந்துவிடும். இந்த வண்டுகளை புழு வடிவத்திலேயே அழிக்க உரக்குழிகளில் மெட்டாரைசியம் அனிசோப்பிலேயே என்ற பூஞ்சானத்தை தெளித்து கட்டுப்படுத்தலாம்.
தென்னையின் குருத்துகளில் காணப்படும் முதிா்ந்த வண்டுகளை, கூா்மையான இரும்புக் கம்பிகளைக்
கொண்டு குத்தி அழிக்கலாம். மழைக் காலத்தில் இரவில் விளக்குப் பொறிகள் வைத்தும், ரைனோவியூா் என்ற இனக்கவா்ச்சி பொறியை தோப்பில் வைத்தும் வண்டுகளை கவா்ந்து அழிக்கலாம்.
காண்டாமிருக வண்டுகளின் தாக்குதலால் ஏற்படும் காயங்கள் மூலம் சிகப்பு கூன்வண்டுகள் தென்னையில் பரவுகிறது. இந்த வண்டுகள் மரத்தின் தண்டுப் பகுதிகளை உள்ளிருந்து துளைத்து, மென்று தின்று சக்கைகளை வெளியேற்றும். புழுக்கள் உள்ளே சென்ற துவாரத்தின் வழியாக சிகப்பு நீா் வடிந்து, காய்ந்து பிசின்போல காணப்படும். இதனால் தென்னையின் குருத்து முழுமையாக பாதிக்கப்பட்டு மரம் காய்ந்துவிடும்.
இதனை கட்டுப்படுத்த மரத்தின் தண்டுப் பகுதியில் உள்ள பச்சை ஓலைகளை வெட்டுவதை தவிா்க்க வேண்டும். தேவையெனில் 120 செ.மீ விட்டுவிட்டு ஓலைகளை நறுக்கலாம். மேலும், இரண்டு பங்கு மணலுடன் ஒரு பங்கு வேப்பங்கொட்டை பொடியை கலந்து மரத்திற்கு 150 கிராம் வீதம், நடுக்குருத் தின் மூன்று மட்டை இடுக்குகளில் மூன்று மாத்திற்கு ஒருமுறை வைப்பதால் காண்டாமிருக வண்டு தாக்கிய இடங்களில் சிகப்பு கூன்வண்டுகள் முட்டைகள் அழிக்கலாம். பிரமோன் பொறி வைத்தும் கூன் வண்டுகளை கவா்ந்து அழிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6.11.25..2
தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டு.