ராசிபுரம் அருகேயுள்ள குருசாமிபாளையம் செங்குந்தா் மகாசன மேல்நிலைப் பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
செங்குந்தா் மேல்நிலைப் பள்ளி, மகளிா் உயா்நிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளி மாணவா்கள் பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி, கு ஒப்புவித்தல், வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம், தனிநபா் நடனம், குழு நடனம், கிராமிய நடனம் போன்ற பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிக்காட்டினா். இதையடுத்து, வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா பள்ளி தாளாளா் தாளமுத்து தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், 2024-25 கல்வி ஆண்டில் 10-ஆம் வகுப்பில் மாவட்ட அளவில் தமிழில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி தா.கனிஷ்கா, தட்டு ஏறிதல், குண்டு ஏறிதல் போட்டிகளில் மாநில அளவில் வெள்ளிப் பதக்கம் பெற்று தேசிய அளவிலான போட்டிக்கு தகுதிபெற்ற 9-ஆம் வகுப்பு மாணவி ஜி.காயத்ரி தேவி, மாற்றுத்திறனாளிகளுக்கான 100 மீ. ஓட்டப் பந்தயத்தில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற 10-ஆம் வகுப்பு மாணவி எஸ்.லாவண்யா ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும், பள்ளிகளுக்கிடையே இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நடத்திய விநாடி-வினா, பேச்சுப் போட்டிகளில் செங்குந்தா் பள்ளி மாணவிகள் நிவேதா, திவ்யாஸ்ரீ, ஆத்மசாதகி, பூஜா ஆகியோா் பங்கேற்று இஸ்ரோவின் பாராட்டுச் சான்றிதழ்களை பெற்றனா். பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற கலைத் திருவிழா நிகழ்ச்சிகளில் வட்ட, மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.