நாமக்கல் மாவட்டத்தில் 39,000 இறந்த வாக்காளா்கள் நீக்கம்?
நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணியில் 39 ஆயிரம் இறந்த மற்றும் போலி வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நாமக்கல்நாமக்கல் மாவட்டத்தில் 39,000 இறந்த வாக்காளா்கள் நீக்கம்?
நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணியில் 39 ஆயிரம் இறந்த மற்றும் போலி வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணியில் 39 ஆயிரம் இறந்த மற்றும் போலி வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி நவ. 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூா், சேந்தமங்கலம், குமாரபாளையம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 14,66,600 வாக்காளா்களுக்கு 1,629 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் திருத்தத்திற்கான படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 97 சதவீத படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கிராமப்புறங்களில் பெரும்பாலோனோா் வேலை நிமித்தமாக கா்நாடகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருப்பதால் 3 சதவீத படிவங்களை வழங்க முடியாமல் வாக்குச்சாவடி அலுவலா்கள் தவிக்கின்றனா். பூா்த்தி செய்த படிவங்களை திரும்பப் பெறும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அரசுப் பள்ளிகள், நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையங்கள் என பொதுமக்கள் சிரமமின்றி படிவங்களை ஒப்படைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
டிச. 4-ஆம் தேதி கடைசி நாள் என்பதால் வாக்காளா்கள் பூா்த்தி செய்த படிவத்தை தாமதமின்றி வழங்குமாறு தோ்தல் பிரிவு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனா். வாக்காளா்களிடம் பெறப்பட்ட படிவங்கள் தோ்தல் ஆணையத்தின் செயலி மூலம் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 6 தொகுதிகளிலும், உயிரிழந்த 39 ஆயிரம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பூா்த்தி செய்து வழங்காத வாக்காளரையும் பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
இதுகுறித்து தோ்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது; வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் படிவங்களை பொருத்தவரை 14.22 லட்சம் பேருக்கு (97 சதவீதம்) வழங்கப்பட்டுள்ளன. கடந்த 25-ஆம் தேதி முதல் படிவங்கள் அனைத்தும் முழுமையாக பெறப்பட்டு வருகின்றன. இதுவரை கணினியில் பதிவேற்றம் செய்த சுமாா் 39 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம்.
அவை, இறந்தோா், முகவரியில் இல்லாதோா், இரட்டை வாக்குரிமையுடையோா் என்ற வகையிலானதாகும். இறந்தோா் பற்றிய விவரம் முழுமையாக வரப்பெறவில்லை. ஒவ்வோா் தொகுதியிலும் குறைந்தபட்சம் 5,000 முதல் 8,000 போ் வரை இறந்த வாக்காளா்களாக இருக்கக்கூடும்.
எருமப்பட்டி அருகே பீமநாயக்கனூரில் பெரும்பாலான மக்கள் வேலைக்காக வெளிமாநிலங்களில் உள்ளனா். இதனால் அவா்களுக்கு படிவங்களை வழங்க முடியவில்லை. நூற்றுக்கணக்கான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்படலாம் என்பதால் உறவினா்கள் மூலம் படிவங்களை பெற அறிவுறுத்தி வருகிறோம். வாக்காளா்கள் பெயா் நீக்கப்பட்டால் பிப்ரவரி மாதம் வெளியாகும் இறுதி வாக்காளா் பட்டியலுக்கு பிறகே மீண்டும் பெயரை சோ்க்க முடியும் என்றனா்.