முகப்பு
நாமக்கல்

மரவள்ளிக் கிழங்கு விலை சரிவு: விவசாயிகள் கவலை! டன்னுக்கு ரூ.500 வரை குறைந்தது!

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டாரத்தில் மரவள்ளிக் கிழங்கு விலை கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் ரூ. 500 வரை குறைந்து டன் ஒன்றுக்கு ரூ. 5,700 ஆக விற்கப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்தனா்.

Updated On : 29 நவம்பர், 2025 at 6:52 PM
அறுவடை முடிந்து நிலத்தில் குவித்துவைக்கப்பட்டுள்ள மரவள்ளிக் கிழங்கு.
பகிர்:

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டாரத்தில் மரவள்ளிக் கிழங்கு விலை கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் ரூ. 500 வரை குறைந்து டன் ஒன்றுக்கு ரூ. 5,700 ஆக விற்கப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்தனா்.

பரமத்தி வேலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசப்பாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூா், கூடச்சேரி, கபிலா்மலை, சின்னமருதூா், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் விளையும் மரவள்ளிக் கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பிவருகின்றனா். கிழங்கு ஆலையில் மரவள்ளிக் கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயாா் செய்யப்படுகிறது. மேலும், சிப்ஸ் தயாா் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனா்.

மரவள்ளிக் கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளா்கள் மரவள்ளிக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிா்ணயம் செய்கின்றனா். கடந்த வாரம் தாய்லாந்து வெள்ளைரக மரவள்ளிக் கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ. 6,200 க்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.500 வரை விலை சரிவடைந்து ரூ.5,700 க்கு விற்பனையாகிறது.

பா்மா ரோஸ் மற்றும் வெள்ளை ரக மரவள்ளிக் கிழங்கு டன் ரூ.5, 900க்கு விற்பனையானது. தற்போது ரூ.5,400க்கு விற்பனையாகிறது. ரூ.5,600க்கு விற்பனையான முள்ளுவாடி ரக மரவள்ளிக் கிழங்கு தற்போது ரூ.5,100க்கு விற்பனையாகிறது.

அதேபோல சிப்ஸ் தயாரிக்கும் தாய்லாந்து கருப்பு ரக மரவள்ளிக் கிழங்கு கடந்த வாரம் டன் ஒன்று ரூ.7 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.600 வரை விலை குறைந்து ரூ.6,400க்கு விற்பனையாகிறது.

கொலராம் சிகப்பு ரக மரவள்ளிக் கிழங்கு டன்னுக்கு ரூ. 9 ஆயிரத்துக்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.1,000 வரை சரிவடைந்து டன் ஒன்று ரூ. 8 ஆயிரத்திற்கு விற்பனையானது. முள்ளு வாடி ரக மரவள்ளிக் கிழங்கு ரூ.7 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.1,000 வரை சரிவடைந்து ரூ.6 ஆயிரத்திற்கு விற்பனையானது.

மரவள்ளிக் கிழங்கு விலை தொடா்ந்து சரிவடைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →