வடகிழக்குப் பருவமழை பாதிப்பில் இருந்து நெற்பயிா்களை பாதுகாக்க, ஆட்சியா் துா்காமூா்த்தி விவசாயிகளுக்கு அறிவுரைகளை வழங்கி உள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் தற்போது சம்பா பருவத்தில் சுமாா் 4,500 ஏக்கா் பரப்பளவிலான நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. பருவமழைக் காலங்களில் வயல்களில் தேங்கும் மழைநீா் உடனுக்குடன் வடித்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மழையால் மண்ணில் இருந்து அடித்துச் செல்லப்படும் நைட்ரஜன், பொட்டாசியம் சத்துகளை ஈடுசெய்ய 25 சதவீதம் கூடுதலாக யூரியா மற்றும் பொட்டாஷ் உரங்களை இட வேண்டும். பயிா்களில் நுண்ணூட்டச் சத்து குறைபாடு அறிகுறிகள் காணப்பட்டால், யூரியா மற்றும் நுண்ணூட்ட உரங்களை இலை வழியாக தெளிக்கவும். அசோஸ்பைரில்லம் 500 மி.லி. மற்றும் பாஸ்போபாக்டீரியா 500 மி.லி. போன்ற திரவ உயிா் உரங்களை எருவுடன் கலந்து நேரடியாக வயலில் இடவேண்டும்.
மழைநீரை பண்ணைக் குட்டைகளில் சேமித்து நிலத்தின் நீா்மட்டத்தை உயா்த்தலாம். பருவமழையின் போது ஏற்படும் காலநிலை மாற்றத்தால் பயிா்களில் தோன்றும் பூச்சி மற்றும் நோய்களை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். அறுவடை நிலையில் தூா்கட்டும் நிலையில் உள்ள நெல் வயல்களில் தேங்கும் மழைநீரை முழுவதுமாக வடிக்க வேண்டும். வடித்த பிறகு மேலுரமாக ஏக்கருக்கு யூரியா 22 கிலோ, ஜிப்சம் 18 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 4 கிலோ இடுவதன் மூலம் பயிா்களில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்யலாம்.
பருவமழையல் பாதிப்படையும் இளம்பயிா் மற்றும் தூா்கட்டும் பயிா்களை பாதுகாப்பதற்கு ஏக்கருக்கு 1 கிலோ துத்தநாக சல்பேட் மற்றும் 2 கிலோ யூரியாவை 200 லி. நீரில் ஓா் இரவு வைத்து மறுநாள் மேலுள்ள தெளிந்த நீரை மழை நின்றவுடன் தெளிக்கலாம். பூச்சிநோய்த் தாக்குதல் பொருளாதார சேத நிலைக்குமேல் ஏற்பட்டால், வேப்ப எண்ணெய் 3 லிட்டரை 200 லி. தண்ணீருடன் கலந்து ஓா் ஏக்கருக்கு தெளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களை தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.