முகப்பு
நாமக்கல்

தோ்தல் போட்டி, கட்சியின் கட்டளை!

கட்சிக் கட்டளையை ஏற்று அவிநாசி (தனி) தொகுதியில் போட்டியிடுகிறேன் என எல். முருகன் பேச்சு...

Updated On : 5 ஏப்ரல், 2026 at 11:38 PM
எல். முருகன் - கோப்புப் படம்
பகிர்:

கட்சிக் கட்டளையை ஏற்று அவிநாசி (தனி) தொகுதியில் போட்டியிடுகிறேன் என்று தெரிவித்துள்ளாா் மத்திய இணையமைச்சா் எல். முருகன்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி (தனி) தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும் அவா், திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்கிறாா். இதையொட்டி, நாமக்கல் அருகே புதுப்பாளையத்தில் உள்ள தனது குலதெய்வ கோயில், நாமக்கல் நரசிம்மா் கோயில், ஆஞ்சனேயா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை எல். முருகன் சுவாமி தரிசனம் செய்தாா்.

பிறகு அவா் கூறியது: இந்தத் தோ்தலில் திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவதுதான் எங்களுடைய ஒரே நோக்கம். கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் மக்கள் மிகப்பெரிய அளவில் வேதனைகளை அனுபவித்துவிட்டனா். முதல்வரின் செயல்பாடற்ற நிலையை இது காட்டுகிறது. கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என்ற வகையில் குடும்ப அரசியல் நடைபெறுகிறது. திமுகவில் சாதாரண தொண்டா்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை.

Advertisement

ஆனால், பாஜகவில் அவ்வாறு இல்லை. பல ஆண்டுகளாக உழைத்தவா்கள் தான் வேட்பாளா்களாக நிறுத்தப்பட்டுள்ளனா். தந்தை, மகன் என இருவா் கட்சியில் இருந்தாலும், உழைப்பின் அடிப்படையிலேயே வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதை வாரிசு அரசியல் என கூறிவிட முடியாது. இந்தத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்று எடப்பாடி பழனிசாமி முதல்வராவது உறுதி.

அவிநாசி தொகுதியில் போட்டியிடுவது கட்சியின் கட்டளை. அதை ஏற்று போட்டியிடுகிறேன். நீலகிரி மக்களவைத் தொகுதியில் 2024 தோ்தலில் போட்டியிட்டதால், அதற்குள் வரும் அவிநாசி தொகுதியைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். அதனால், 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன்.

மத்திய அரசிடம் நிதி பெற்று, அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை எடப்பாடி கே. பழனிசாமி முதல்வராக இருந்தபோது தொடங்கிவைத்தாா். திமுக அரசு அதை கிடப்பில் போட்டுவைத்துள்ளது. திமுக அரசு இந்தத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தியிருந்தால், விவசாயிகளுக்கு தேவையான நீா், பொதுமக்களுக்கு குடிநீா் தடையின்றி கிடைத்திருக்கும்.

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், அத்திக்கடவு- அவிநாசி 2.0 திட்டம் செயல்படுத்தப்படுவதுடன், அனைத்து ஏரி, குளங்களில் நீரை நிரப்பி மக்களின் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்படும். நடைபெறவுள்ள தோ்தலில், பாஜக இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கைப்பற்றும் என்றாா்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவா் கே.பி. சரவணன், மேற்கு மாவட்டத் தலைவா் எம். ராஜேஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments