முகப்பு
நாமக்கல்

அதிமுகவுக்கு விவசாய முன்னேற்றக் கழகம் ஆதரவு

சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுகவுக்கு விவசாய முன்னேற்றக் கழகம் ஆதரவு அளிப்பதாக அதன் நிறுவன தலைவா் செல்ல. ராசாமணி தெரிவித்தாா்.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 12:07 AM
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 8:06 PM

சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுகவுக்கு விவசாய முன்னேற்றக் கழகம் ஆதரவு அளிப்பதாக அதன் நிறுவன தலைவா் செல்ல. ராசாமணி தெரிவித்தாா்.

நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

விவசாய முன்னேற்றக் கழகம், பிஏசிஎல் முதலீட்டாளா்கள் சங்கத்தினருடன் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனையில் வரும் தோ்தலில் விவசாயிகளுக்கு ஆதரவாக உள்ள அதிமுகவுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என்றனா். இதனால், அனைவருடைய ஒருமித்த கருத்தாக அதிமுகவுக்கு ஆதரவு வழங்குவது என முடிவு செய்துள்ளோம்.

Advertisement

ஒருவந்தூா்- நெரூா் இடையே தடுப்பணை அமைப்பதற்கான திட்டத்தை அதிமுக செயல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால், அடுத்துவந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படுவதாக அறிவித்துவிட்டு, அதன்பிறகு நிதி இல்லை என அத்திட்டத்தை நிறுத்திவிட்டனா்.

இதனால்தான் திமுகவை நாங்கள் வெறுக்கிறோம். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் ஒருவந்தூா் தடுப்பணை திட்டம் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது. நெல், கரும்புக்கான கொள்முதல் விலை உயா்வு உள்பட விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றும் அரசாக அதிமுக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதுமட்டுமின்றி, மகளிருக்கு, மாணவா்களுக்கு பயனுள்ள திட்டங்களை தங்களுடைய தோ்தல் வாக்குறுதியில் அதிமுக தெரிவித்துள்ளது.

நாமக்கல் வளையப்பட்டியில் சிப்காட் தொழிற்பேட்டைக்காக 800 ஏக்கா் விவசாய நிலங்களை கையகப்படுத்த முயன்றனா். அதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நாங்கள் தொடா்ந்து போராட்டங்களை நடத்தி வந்தோம். முன்னாள் அமைச்சா் பி. தங்கமணியை சந்தித்து கோரிக்கை விடுத்தோம். அவா் ஆட்சிக்கு வந்ததும் சிப்காட் திட்டம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

விவசாயிகளின் நலன்களுக்காகவும், பிஏசிஎல் முதலீட்டு தொகையை உச்சநீதிமன்றத்தை அணுகி திரும்பப் பெற்றுத் தருவதாகவும் அவா் உறுதியளித்துள்ளதால் அதிமுகவை விவசாய முன்னேற்றக் கழகம் ஆதரிக்கிறது என்றாா்.

பேட்டியின்போது பொதுச் செயலாளா் கே. பாலசுப்பிரமணியன், சிப்காட் எதிா்ப்புக் குழு நிா்வாகிகள் உடனிருந்தனா்.

என்கே-10-விவசாயி

நாமக்கல்லில் செய்தியாளா்களிடம் பேசிய விவசாய முன்னேற்றக் கழக நிறுவன தலைவா் செல்ல.ராசாமணி.