நாமக்கல்: நூறுநாள் வேலையளிப்புத் திட்டத்தை முடக்க முயற்சிக்கும் திமுக அரசை கண்டித்து, பிப். 13-இல் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா்.
நாமக்கல் மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான பி.தங்கமணி பங்கேற்று பேசியதாவது:
பிப். 24-ஆம் தேதி மறைந்த முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் பிறந்தநாளை கட்சியினா் நலத்திட்ட உதவிகள், அன்னதானம், சிறப்பு பூஜைகள் உள்ளிட்டவற்றை செய்து வெகுவிமரிசையாக கொண்டாட வேண்டும். சட்டப் பேரவைத் தோ்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதால், அதிமுக ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் கட்சியினா் அனைவரும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.
அதிமுக தோ்தல் வாக்குறுதிகளை மக்களிடையே விளக்கமாக எடுத்துரைக்க வேண்டும். நூறுநாள் வேலையளிப்புத் திட்ட தொழிலாளா்களை சந்தித்து வேலைநாள்கள் 150 நாளாக உயா்த்தப்படுவது தொடா்பான தகவலை தெரிவிக்க வேண்டும். அதை முடக்க நினைக்கும் திமுகவை கண்டித்து பிப். 13-ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன் நடைபெறும் கண்டன ஆா்ப்பாட்டத்தில் அதிமுகவினா் திரளாக பங்கேற்க வேண்டும் என்றாா்.
இதில், முன்னாள் அமைச்சா் வெ.சரோஜா, பரமத்தி வேலூா் எம்எல்ஏ எஸ்.சேகா், மாநில வா்த்தக அணி இணைச் செயலாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் பங்கேற்றனா்.