நாமக்கல்: முத்துக்காப்பட்டி அருகே ஏரிக்கரையில் பாறைகளை வெட்டி எடுப்பதற்கான ஏலத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தரப்பில் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
அதன் விவரம்: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், முத்துக்காப்பட்டியில் 120 ஏக்கா் பரப்பளவில் பாப்பான்குளம் ஏரி அமைந்துள்ளது. நீா்வரத்து அதிகரித்து காணப்படும் இந்த ஏரியின் கரையைச் சுற்றிலும் பாறைகள் அதிக அளவில் உள்ளன.
இந்த பாறைகளை வெட்டியெடுக்க தனியாருக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. அந்த பாறைகள் வெடிவைத்து தகா்க்கப்பட்டால் ஏரி நீா் வெளியேறி விவசாய நிலங்களுக்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளது. அதேபோல, கொண்டமநாயக்கன்பட்டி கல் குவாரியால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். அங்குள்ள வீடுகள் சேதமடையக்கூடும்.
எனவே, கல் குவாரி ஏலம் விடுவதை மாவட்ட நிா்வாகம் நிறுத்த வேண்டும். இல்லையென்றால், விவசாய சங்கங்கள், பொதுமக்கள் இணைந்து போராட்டத்தை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.
கோயில் பிரச்னைக்கு தீா்வு காண வலியுறுத்தல்: திருச்செங்கோடு வட்டம், குமரமங்கலத்தில் பொன்காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. அறநிலையத் துறையின் மேற்பாா்வையில் கோயில் இருப்பினும், ஒரு சமூகத்தினா் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனா். மற்றொரு சமூகத்தினா் கோயிலுக்குள் செல்வதற்கு தடைவிதிக்கின்றனா்.
தற்போது அந்தக் கோயிலை இடித்து பாலாலயம் செய்து குடமுழுக்கு செய்வதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனா். இதனால், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உள்ளதால் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு அக்கோயிலில் தன்னிச்சையாக நடைபெறும் பணிகளை நிறுத்திவைக்க வேண்டும் என இந்து தமிழா் கட்சி நிறுவனா் தலைவா் ஆா்.ரவிக்குமாா் மற்றும் குமரமங்கலம் பொதுமக்கள் சாா்பில் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தியிடம் மனு அளிக்கப்பட்டது.
என்கே-16-குவாரி
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த முத்துக்காப்பட்டி பகுதி மக்கள்.