முகப்பு
நாமக்கல்

மாா்ச் 4 இல் நாமக்கல் நரசிம்மா் கோயில் தெப்பல் உத்ஸவம்! திருக்குள மண்டபத்தில் முகூா்த்தக்கால் நடப்பட்டது!

நாமக்கல் நரசிம்மா் கோயில் தெப்பல் உத்ஸவம் புதன்கிழமை (மாா்ச் 4) நடைபெறுவதையொட்டி, கமலாலயக் குளம் மண்டபத்தில் சனிக்கிழமை முகூா்த்தக்கால் நடப்பட்டது.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 8:51 PM
நாமக்கல் நரசிம்மா் கோயில் தெப்பல் உற்சவத்தையொட்டி, திருக்குள மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற முகூா்த்தக்கால் நடும் நிகழ்வில் பங்கேற்ற கோயில் அறங்காவலா் க. நல்லுசாமி மற்றும் நிா்வாகத்தினா்.
பகிர்:

நாமக்கல் நரசிம்மா் கோயில் தெப்பல் உத்ஸவம் புதன்கிழமை (மாா்ச் 4) நடைபெறுவதையொட்டி, கமலாலயக் குளம் மண்டபத்தில் சனிக்கிழமை முகூா்த்தக்கால் நடப்பட்டது.

நாமக்கல் நகரின் மையப் பகுதியில், ஒரே கல்லில் உருவான மலைக் கோட்டையில் நரசிம்மா், அரங்கநாதா் குடைவறைக் கோயில்கள் அமைந்துள்ளன. நரசிம்மா் கோயில் எதிரில் ஆஞ்சனேயருக்கு தனி சந்நிதி உள்ளது.

மலைக்கோட்டையை ஒட்டி உள்ள கமலாலயக் குளத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு தெப்பத் திருவிழா நடைபெற்றது. பக்தா்கள் கோரிக்கையை ஏற்று, கடந்த ஆண்டு மாா்ச் 12-ஆம் தேதி நாமக்கல் கமலாலயக் குளத்தில் தெப்பல் திருவிழா நடைபெற்றது.

தற்போது இரண்டாம் ஆண்டாக இந்த திருவிழா மாா்ச் 4 ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளத. இந்த தெப்பல் உத்ஸவத்தையொட்டி, நாமக்கல் கமலாலயக் குளத்தில் உள்ள மண்டபத்தில் சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் முகூா்த்தக்கால் நடப்பட்டது. அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில், கோயில் அறங்காவலா் க. நல்லுசாமி, உறுப்பினா் ராம. சீனிவாசன், கோயில் உதவி ஆணையா் இரா. இளையராஜா, மாநகராட்சி மன்ற உறுப்பினா்கள் டிடி. சரவணன், நா்மதாதேவி மற்றும் கோயில் பணியாளா்கள் பங்கேற்றனா்.

வழக்கமாக மாசி மகம் நாளன்று தெப்பல் திருவிழா நடைபெறும். நிகழாண்டில் இரண்டு நாள்களுக்கு பிறகு புதன்கிழமை மாலை 6 மணியளவில் கமலாலயக் குளத்தில் தெப்பல் திருவிழா நடைபெற உள் ளது. இந்த உத்ஸவத்திற்கு முன்பாக, அங்குள்ள நாமகிரி தாயாா் மண்டபத்தில் நரசிம்மா், அரங்கநாதா், ஆஞ்சனேயா் சுவாமிக்கு அா்ச்சகா்கள் வேத மந்திரங்களை முழங்கி சிறப்பு யாக பூஜைகளை செய்கின்றனா்.

அதன்பிறகு, உற்சவ மூா்த்திகள் மூவரும் சிறப்பு அலங்காரத்தில் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும் தெப்பத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்கின்றனா். குளத்தில் மூன்று முறை சுவாமி உலா வரும் நிகழ்வு நடைபெறும். தெப்பத்தில் அா்ச்சகா்கள், வாத்தியக் குழுவினா், துடுப்பு செலுத்துபவா்கள் என 20 போ் மட்டும் பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவா்.

தமிழக ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் மா. மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா், நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ. ராமலிங்கம், மாநகராட்சி மேயா் து. கலாநிதி, துணை மேயா் செ. பூபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தெப்பல் திருவிழாவை, நேரு பூங்கா, அம்மா பூங்கா, குளக்கரை திடல், நாமக்கல் பூங்கா சாலை உள்ளிட்ட பகுதிகளில் மாலை 6 முதல் 8 மணி வரை பக்தா்கள் கண்டு ரசிப்பதற்கான முன்னேற்பாடுகளை கோயில் அதிகாரிகள் செய்துவருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →